திண்டிவனம்: எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று திருமாவளவனுக்கு மறைமுகமாக அன்புமணி திடீர் பாசம் காட்டி உள்ளார். திண்டிவனம் அருகே உள்ள கீழ்சிவிரி கிராமத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி எம்பி கலந்து கொண்டார். பின்னர் அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 78 வருடம் ஆகிறது.
ஆனால் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்குவோம். இது வெறும்பேச்சு அல்ல. அங்களுக்கு முதன் முதலில் ஒன்றிய அமைச்சர் பதவி கிடைத்தவுடன், நாங்கள் 1998ல் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை ஒன்றிய அமைச்சராக்கினோம்.
69 விழுக்காடு இடஒதுக்கீட்டை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒன்றிய அரசு 2026ம் ஆண்டிற்கு பிறகுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவார்கள். அதற்கு முன்பாக சர்வே எடுக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தி வருகிறோம். ஒன்றிய அரசை கணக்கெடுப்பு நடத்த நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசியல் காரணத்திற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் முதல்வர் ஆக முடியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்த நிலையில், பாமகவுக்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்குவோம் என்று அன்புமணி தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.