நெய்வேலி: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த கோரியும் நெய்வேலி என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தின் முன் தமிழக விவசாய சங்கங்களின் சார்பில் முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் விவசாயிகள் கையில் நெல் நாற்று, கரும்புகளுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைத்து செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெய்வேலி போலீசார் அவர்களை கைது செய்து என்எல்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.