அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பிரதான சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள், கடந்த 20ம் தேதி ஒருவர் உருட்டுக்கட்டையுடன் புகுந்து, கடை உரிமையாளரிடம், ‘‘தீபாவளிக்கு இந்த கடைக்கு வருவேன். அப்போது, ₹5 ஆயிரம் மாமூல் தரவேண்டும். இல்லை என்றால் பெட்ரோல் ஊற்றி கடையை கொளுத்திவிடுவேன்,’ என ஆபாச வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்து சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி அறிந்த காவல் துறை உயர் அதிகாரிகள், அந்த ரவுடி மீது நடவடிக்கை எடுக்க, திருமங்கலம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது சபியுல்லா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மிரட்டல் விடுத்த நபர், பிரபல ரவுடி விக்கி என்பதும் ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய சரித்திரபதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் திருமங்கலம் பகுதியில் உருட்டுக்கட்டையுடன் சுற்றித்திரிந்த ரவுடி விக்கியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், கடைக்குள் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் திட்டியது உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.