அண்ணாநகர்: திருமங்கலத்தில் உருட்டுக்கட்டைகளுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து உரிமையாளரிடம் மாமூல்கேட்டு மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளத்தில் வெளி யானதால் பரபரப்பு நிலவுகிறது. சென்னை திருமங்கலம் பிரதான சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம்தேதி மர்மநபர் உருட்டுக்கட்டையுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து, தீபாவளிக்கு மீண்டும் கடைக்கு வருவேன். அப்போது 5 ஆயிரம் ரூபாய் மாமூல் தரவேண்டும். இல்லை என்றால் பெட்ரோல் ஊற்றி கடையை கொளுத்திவிடுவேன் என உரிமையாளரை மிரட்டியுள்ளார். சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மாரியப்பனிடம் மாமூல் கேட்டு மிரட்டிய சம்ப வத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தை கடை ஊழியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த தகவல் காவல் உயரதிகாரிகளுக்கு கிடைத்தவுடன் ரவுடியை உடனே கைது செய்யும்படி திருமங்கலம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது சபியுல்லா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, பிரபல ரவுடி விக்கி என்பதும் ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய சரித்திரபதிவேடு குற்றவாளியான என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று திருமங்கலம் பகுதியில் உருட்டுக்கட்டையுடன் சுற்றித்திரிந்த ரவுடி விக்கியை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், கடைக்குள் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் திட்டியது உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவம் சமூகவலைதளத்தில் வெளியானதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.