வாரி: கிரீஸ் நாட்டின் வாரி நகரில், ட்ரோமியா சர்வதேச ஸ்பிரின்ட் அண்ட் ரிலே ஓட்டப் போட்டிகள் நடந்தன. 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் பென்ஜமின் ரிச்சர்ட்சன் 10.01 நொடியில் கடந்து முதலிடத்தை பிடித்தார். ஓமன் வீரர் அலி அன்வர் அல் பலுசி 10.12 நொடியில் கடந்து 2ம் இடம் பெற்றார். இந்திய வீரர் அனிமேஷ் குஜுர், 10.18 நொடியில் 100 மீட்டர் துாரத்தை கடந்து 3ம் இடத்தை பிடித்தார். இது, இந்தியாவின் புதிய தேசிய சாதனையாக அமைந்தது. இதற்கு முன், பெங்களூருவில் கடந்த மார்ச் மாதம் நடந்த 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் குரீந்தர்விர் சிங் 10.20 நொடியில் பந்தய துாரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அனிமேஷ் முறியடித்துள்ளார்.
முன்னதாக, இந்தாண்டின் துவக்கத்தில் கொரியாவின் குமி நகரில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் அனிமேஷ் குஜுர், 20.32 நொடியில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அது, 200 மீட்டர் போட்டியில் புதிய தேசிய சாதனையாக அமைந்தது. எனவே, 100 மீட்டர், 200 மீட்டர் என இரு ஓட்டப் போட்டிகளிலும் தேசிய சாதனை படைத்த வீரர் என்ற சாதனையை அனிமேஷ் குஜுர் படைத்துள்ளார்.