இந்தியாவில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகளில், நவராத்திரி மிக பிரமாண்டமான ஒன்றாகும். நவராத்திரி என்றால் ‘‘ஒன்பது இரவுகள்” என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பத்தாவது நாளான விஜயதசமி, வாழ்க்கையின் இந்த மூன்று அம்சங்கள் மீதும் வெற்றியடைவதை குறிக்கிறது. இந்த ஒன்பது நாட்களும் வீட்டில் கொலு வைத்து அனைவரையும் அழைத்து அவர்களுக்கு சுண்டல் போன்ற உணவுகளை பிரசாதமாக கொடுப்பது வழக்கம். சில டிப்ஸ்களை பின்பற்றலாம்.
* கடலைப்பருப்பு சுண்டலில் தேங்காய்த் துருவல், உப்பு, சீரகம், பச்சை மிளகாய் இவற்றை தேவைக்கேற்ப அரைத்துச் சேர்த்துப் பிசிறி, தாளிதம் செய்தால் சுவை கூடும்.
* தனியா, கடலைப்பருப்பு, எள், மிளகாய் இவற்றை தனித்தனியாக வாணலியில் வறுத்து, பெருங்காயம் சேர்த்து, கரகரப்பாக பொடித்து வைத்துக் கொண்டு சுண்டல்களில் தூவினால் சுவையாக இருக்கும்.
* கடலைப்பருப்பை வேகவைத்து, வெல்லப்பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்தால் சுவையான இனிப்பு சுண்டல் தயார். இது ஹயக்ரீவருக்குப் பிடிக்கும் என்பதால் வியாழக்கிழமையன்று அவருக்கு நைவேத்யம் செய்யலாம்.
* தேங்காய் துருவலை வறுத்து சுண்டலில் கலந்தால் ஊசிப்போகாது. கொப்பரைத் துருவலையும் சேர்க்கலாம்.
* சிறு தானியங்களில் வகை வகையாக, சுவையான, சத்தான சுண்டல்கள் செய்யலாம்.
* தானியங்களை வெந்நீரில் ஊறப் போட்டால் சீக்கிரம் வெந்து விடும். பிறகு சுண்டல் செய்வது சுலபம்.
* கடலைப்பருப்பு, பாசிப்பருப்புகளை ஊறவைக்காமல் களைந்து அப்படியே வேகவைத்தாலே போதும், சுவையான சுண்டல் ரெடியாகிடும்.
– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்.