சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு 2 முதல் 3 செல்சியஸ் டிகிரி வெப்ப அலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொது சுகாதாரத்துறை தரப்பிலிருந்து பொதுமக்கள் செய்யவேண்டியவை எனவும், செய்யக்கூடாதவை எனவும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அதில்
*பொதுமக்கள் நண்பகலில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டுகோள்
* நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்
*அதிகாலை அல்லது மாலையில் மட்டும் பொதுமக்கள் வெளியே செல்லும் வேலைகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்தல்.
*பொதுமக்கள் தலையில் தொப்பி, துண்டு, குடைகள் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.
*காலணி அணியாமல் வெளியில் வெயிலில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.
*பொதுமக்கள் வெளியில் செல்லும்போது குடிநீர் பாட்டிலுடன் செல்ல அறிவுறுத்தல்
* அதிக எடையில்லாமல் தளர்வான உடை அணிய அறிவுறுத்தல்
*ஓஆர்எஸ் கரைசல் எப்போதும் கைவசம் இருக்க வேண்டும்.
* வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு, எழுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை ஒரு சிட்டிகை உப்புடன் கலந்து பருக வேண்டும்.
* தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்ற நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட அறிவுறுத்தல்
* உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க பொதுமக்கள் அடிக்கடி நீர் குடிக்க அறிவுறுத்தல்
* குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்.
*உயர் ரத்த அழுத்தம், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
*சூரிய வெளிச்சத்தில் நேரடியாக செல்ல வேண்டாம், நண்பகலில் கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளை செய்ய வேண்டாம்.
* வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தல்.
*மயக்கம், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
* நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ செல்லப்பிராணிகளையோ விட்டுச் செல்ல வேண்டாம்.