புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்று பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், வரும் 9, 10ம் தேதிகளில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டின் தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, தற்போது மனிதனை மையமாகக் கொண்டதாக மாறியுள்ளது. இதன் உந்து சக்தியாக இந்தியா செயல்படுகிறது. உலக நலனுக்கான ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ வழிகாட்டும் கொள்கை வகுக்கப்பட்டது. வரும் 2047ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். நாட்டில் ஊழல், ஜாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இனிமேல் இடமிருக்காது. ஜி-20 உச்சி மாநாட்டில் எதிர்கால திட்டத்திற்கான பாதை வகுக்கப்படும். இது வெறும் யோசனைகளாக இருக்காது.
1 பில்லியன் மக்கள் பசியால் வாடுவதாக கூறப்பட்ட இந்தியா, தற்போது 1 பில்லியன் ஆசைகளுடன், 2 பில்லியன் திறமையான இளைஞர்களின் கைகளுடன் உள்ளது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான வளர்ச்சியின் அடித்தளத்தை இந்தியர்கள் வகுப்பார்கள். அதில் இந்தியர்களின் பங்கு அதிகமாக இருக்கும். உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கும். பாகிஸ்தான், சீனாவின் ஆட்சேபனைகளை மீறி காஷ்மீர், அருணாச்சல பிரதேசத்தில் ஜி-20 மாநாடுகள் நடத்தப்பட்டன.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மாநாடுகளை நடத்தினோம். இணைய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. சட்டவிரோத நிதி நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ‘சைபர்ஸ்பேஸ்’ புதிய பரிமாணத்தை கட்டமைத்துள்ளது. சைபர் அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இணைய பயங்கரவாதம், ஆன்லைன் தீவிரமயமாக்கல், பணமோசடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
போலிச் செய்திகள் சமூக அமைதியின்மையைத் தூண்டுகின்றன. இதுதொடர்பாக சர்வதேச மாநாட்டில் வலியுறுத்த வேண்டும். கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில், அரசின் அரசியல் ஸ்திரத்தன்மையால் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகளாவிய பணவீக்கத்தை எதிர்த்துப் போராட சரியான நேரத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜி-20 உச்சி மாநாட்டின் நோக்கமானது ‘வசுதைவ குடும்பம்’ என்பதாகும். இது வெறும் கோஷம் மட்டுமல்ல, நம்முடைய நாட்டின் கலாசார நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் அமையும்’ என்றார்.