சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கோடை விடுமுறையில் 3 லட்சம் பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை விடுமுறையில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துளள்ளனர் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பூங்கா நிர்வாகம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்று. இதில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறை தினத்தை ஒட்டி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்துவிட்டு சென்றுள்ளனர்.
மேலும் பார்வையாளர்களின் வசதியை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக இந்த கோடை விடுமுறையில் டிக்கெட் எடுப்பதை எளிதாக்க 5 எண்ணிக்கையிலான “தானியங்கி டிக்கெட் உருவாக்கும் கியோஸ்க்குகள்” நிறுவப்பட்டு உள்ளன. இந்த கியோஸ்க்குகள் டிக்கெட் செயல்முறையை கணிசமாக எளிதாக்கி உள்ளன. மேலும், இது பார்வையாளர்களால் நன்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உயிரியல் பூங்கா வாகன சுற்றுக்கு, அதிக பார்வையாளர்களுக்கு இடம் அளிக்கவும், காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் ஒரு புதிய ஆப்-ஆன், ஆப்-ஆப் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இது பார்வையாளர்களின் பூங்கா சுற்று வாகனத்திற்காக காத்திருப்பு நேரங்களை கணிசமாக குறைக்கிறது. உயிரியல் பூங்காவில் 7 முக்கிய இடங்களில் மூடுபனி அறைகள் போன்ற அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.. அனைத்து விலங்கு இருப்பிடங்களிலும் போதுமான நிழல் மற்றும் போதுமான நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“பூங்கா தூதுவர்” கோடைகால பயிற்சி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு, நான்கு தொகுதியாக மாணவர்கள் பங்கேற்றனர். இந்த கல்வி முயற்சி மாணவர்களை வனவிலங்கு கல்வியில் விலங்குகளின் பண்புகள் மற்றும் சுற்றுச்சூழலில் அவற்றின் பங்குகளை புரிந்துகொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி மூலம் எதிர்கால பாதுகாப்பு பொறுப்பாளர்களை உருவாக்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.