Friday, June 20, 2025
Home செய்திகள் பள்ளிக்கூடம் போகலாமா?!

பள்ளிக்கூடம் போகலாமா?!

by Porselvi

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திரும்பத் தொடங்க இருக்கின்றன. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மாற்றங்களை எதிர்கொள்ளும் ஒரு சவாலான கட்டமாக இருக்கலாம். மனதளவிலும் உடலளவிலும் கூட நிறைய சவால்கள், கடின உழைப்பும் தேவைப்படும் காலமிது. எப்படித் தயார் செய்துகொள்ளலாம். ஆரம்பத்திலேயே நாம் நம்மை குடும்பமாக இதற்கு நெறி படுத்திக் கொள்வதில்தான் அவசர நிலை, படபடப்பு, சண்டை, அதனால் ஏற்படும் கருத்து மோதல்களையும் தவிர்க்கலாம். இதோ உடல், மனம் என இரண்டுக்குமான சில ஆலோசனைகள்.

குழந்தைகளுக்கான ஆலோசனைகள்:

1. பள்ளி துவக்கத்தை அனுபவிக்க மனதளவில் தயார் செய்யுங்கள்
பள்ளி செல்லும் உற்சாகத்தை உருவாக்குங்கள். பழைய நண்பர்கள், புதிய பாடங்கள், மற்றும் விளையாட்டு நேரத்தை நினைவூட்டுங்கள். முடிந்தால் அருகாமையில் இருக்கும் பள்ளித் தோழர்களை சந்திக்கச் செய்வது, அவர்களுடன் விளையாடுவது, சில எளிமையான பாடங்கள், பயிற்சிகள் மேற்கொள்வது அவர்களை அடுத்து வரும் பள்ளி நாட்களுக்கு ஒரு இணைப்பை உண்டாக்கும்.

2. தூங்கும் பழக்கங்களை ஒழுங்குபடுத்துங்கள்
விடுமுறை முடிந்து , பள்ளிகள் திறக்க இன்னும் ஓரிரு தினங்களே இருக்கின்றன. இப்போதிருந்தே மெல்ல மெல்ல பள்ளி நேரத்திற்கு ஏற்ப தூக்க நேரத்தை மாற்றுங்கள். இரவில் சீக்கிரம் தூங்குவதையும் பழக்கப்படுத்துங்கள்.

3. பள்ளிக்குத் தயாராக்குங்கள்
புத்தகங்கள், பேனா, சீருடை ஆகியவற்றை முறையாக தயார் செய்து வைக்கச் செய்யுங்கள். மேலும் ஒரே நாளில் புத்தகங்கள், பேக், டிபன் பாக்ஸ் என வாங்காமல் பள்ளி திறப்புக்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே தினந்தோறும் ஒன்றிரண்டு பொருட்கள் என அவர்களுக்குக் கிடைக்கும் புதிய பொருட் களின் மகிழ்வை இன்ஸ்டால்மெண்டில் கொடுங்கள்.

4. ஆரோக்கியமான உணவு பழக்கம்
விடுமுறை காலங்களில் சீரான உணவுகள் இல்லாமல், ஆரோக்கியமான சாப்பாட்டு முறைகள் இல்லாமல் இருந்திருப்பார்கள். அதனை முழுவதுமாக மாற்றாமல் முதலில் சீக்கிரம் காலை உணவை தவறவிடாமல் சாப்பிட பழக்கப்படுத்துங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்புற உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கிய உணவுகளுக்குப் பழக்கமாக்குங்கள். தண்ணீர் குடிக்கும் முறையை சீராக்குகள். சரியாக 8 மணி நேரம் எனில் அதில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மதிய உணவு இடைவேளையுடன் சேர்த்து என மூன்று இடைவேளைகள் பள்ளிகளில் உண்டு. எனில் அதற்கேற்ப நிறைய தண்ணீர் குடித்து போதுமான இடைவேளையில் சிறுநீர் கழிக்கச் செய்யுங்கள். தண்ணீர் குடிக்கும் பழக்கம் மிக அவசியம். அதுதான் குழந்தைகளை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். மேலும் உடலுக்கு இயற்கையான சக்தியும் நீராதாரம்தான்.

5. மனநல உறுதி
புதிய வகுப்பில் புதிய ஆசிரியை/மாணவர்களைப் பற்றிய பதட்டம் இருக்கலாம். ஒரு சிலருக்கு பள்ளியே புதிதாக இருக்கும். இதைப் புரிந்துகொண்டு பேசுங்கள். ஒவ்வொரு நாள் முடிவிலும் குழந்தைகளிடம் பேசி அன்றைய தின அனுபவங்களை கேட்டறியுங்கள்.பெற்றோர்களுக்கான ஆலோசனைகள்

1. தூய்மையான மற்றும் நேரத்தை மதிக்கும் பழக்கம்
குழந்தைகளை நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்ப பழக்கப்படுத்துங்கள். அதற்கு எல்லாவற்றிலும் நீங்களும் சீராக நேரத்தைக் கடைபிடிப்பது அவசியம். சீருடை மற்றும் மதிய உணவு தயார் செய்யும் பொழுதுகளில் குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள். வீட்டில் அம்மா ஒருவருக்குதான் சமையலறை என்றில்லை , அப்பா, வீட்டுப் பெரியவர்கள் எல்லோருமே வீட்டுத் தலைவிக்கு உதவலாம்.

2. பாடங்களின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்க
“ஏன் படிக்கிறோம்?” என்ற கேள்விக்கு பயிற்சிப் பதில்களை உங்களுக்கு நீங்கள் முதலில் கேட்டு பதில் அளித்துப் பாருங்கள். புத்தகங்களைப் பற்றிய ஈர்ப்பு ஏற்படுத்த வார இறுதிகளில் வாசிப்பு நேரம் ஏற்பாடு செய்யுங்கள். உடன் அமர்ந்து புத்தக நேரத்தை நீங்களும் எடுத்துக்கொள்ளலாம்.

3. முதல் வாரத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்
புதிய நண்பர்கள், ஆசிரியர்கள் பற்றி அவர்கள் சொல்லும் அனுபவங்களை கேட்டு, நல்ல வழிகாட்டுதல் அளிக்கவும். புதிய பள்ளி எனில் எது பிடித்திருக்கிறது, எது பிடிக்கவில்லை எனக் கேட்டு
அதற்கேற்ப அவர்களுக்கான சூழல்களை உருவாக்கலாம்.

4. தொலைபேசி/டிஜிட்டல் சாதனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள்
பள்ளி நாட்களில் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு நேர வரையறை வைப்பு மிக அவசியம். இதனை விடுமுறை நாட்களில் இருந்தே துவங்குங்கள். இதனை பெரியவர்களும் கடைபிடித்தாலே அவர்களும் சொல்லாமலேயே செய்வர்.

5. உற்சாகமான சூழ்நிலையை ஏற்படுத்துங்கள்

“பள்ளி செல்வது கடமை” என்பதற்குப் பதிலாக “அறிவைப் பெறும் அருமையான வாய்ப்பு” என அவர்களை உணரச் செய்யுங்கள். பள்ளி என்றாலே மகிழ்ச்சியாகப் பார்க்கும் மனநிலையை உண்டாக்குங்கள். மேலே சொன்ன அனைத்தும் எளிமையான தினந்தோறுமான ஆலோசனைகள். வகுப்புகள், வீட்டுப்பாடங்கள், டியூஷன்கள் என துவங்க இருக்கும் பரபரப்பான சூழலை மன ரீதியாகவும், மகிழ்ச்சியாகவும் அணுகுவது எப்படி. மேலும் ஆலோசனைகள் கொடுக்கிறார் மருத்துவ உளவியலாளர் டாக்டர் எஸ்.வந்தனா ( BSc – Psychology, MSc – Psychology, M.Phil – Clinical Psychology, Clinical Psychologist, Psychologist) ‘ஒவ்வொரு வருடமும் தேவையான ஒரு ஆலோசனைதான் இது. ஏற்கனவே பள்ளிக்குச் சென்றுக்கொண்டிருக்கும் குழந்தைகள், மற்றொன்று முதல் முறையாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள். பெரும்பாலும் வீட்டில் இருக்கும் போது மொபைல், டிவி, அதிக விளையாட்டு, நினைத்தது கிடைக்கும் போன்ற சூழலில் இருக்கும் குழந்தைகள்தான் பள்ளிக்குச் செல்வதை விரும்பாத சூழலாகவும், இன்னும் கொஞ்சம் அதிகம் விடுமுறை கிடைத்திருக்கலாம் என்கிற மனநிலையிலும் இருப்பதைக் காண முடிகிறது. விடுமுறையானாலும் மொத்தமாக அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடாமல் கூடுமானவரை கோடைகால பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், பொது அறிவு, பெரியவர்களின் அறிவுரைகள், பெற்றோர்களின் வீட்டு வேலைகளில் உதவிகள் என சரிசமமாக அவர்களுக்குக் கொடுக்கும் போது பள்ளியின் சூழலுக்கும், வீட்டின் சூழலுக்கும் பெரிதான வித்யாசம் இருக்காது. இந்த பள்ளிக்காக குழந்தைகளைத் தயார்படுத்துதலில் இரண்டு முதிர்ச்சித் தன்மைகள் உண்டு. பள்ளிக்கான முதிர்வு (School maturity) மற்றும் பள்ளி தயார்நிலை ( School Readiness) இது இரண்டும் வேறு வேறு. அதாவது பள்ளிக்கான மனநிலை முதிர்ச்சியில் நான்கு வளர்ச்சிகள் அடக்கம். 1. உடல் வளர்ச்சி (Physical Development),

2. சமூக வளர்ச்சி (Social Development), 3. அறிவாற்றல் வளர்ச்சி (Cognitive development), 4. உணர்வு மேம்பாடு (Emotional improvement). இதெல்லாம் இன்னைக்கு நிறைய பள்ளிகளே கொடுக்கறாங்க. விடுமுறை நாட்கள்ல உங்களால் செலவு செய்ய முடிந்தால் இப்படியான உடல், மனநிலை வளர்ச்சி வகுப்பில் (Personality Development) சேர்த்துவிடலாம். மேலும் ஒரே குழந்தை எனில் நிச்சயம் அவர்களுக்கு ப்ரீ-ஸ்கூல் அல்லது பிளே ஸ்கூல் அவசியம். குழந்தைகள் குழந்தைகளுடன் இருந்தால் தான் அவர்களுடைய நடவடிக்கைகள் வயதுகேற்ப மாறும். சில பெற்றோர்கள் அக்கம் பக்கம், குழந்தைகளுடன் விளையாடக் கூட விடாமல் கட்டுப்பாடு விதிப்பர். இதைத் தவிர்த்தாலே சிந்தித்தல், சேர்ந்து விளையாடுதல், கூடி திட்டமிடல், ஒன்றிணைந்து பகிர்ந்து உண்ணுதல் போன்ற பழக்கங்கள் வரும். அதனால்தான் இரண்டரை வயதுத் தொட்டாலே பிளே ஸ்கூல் அவசியம் என்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு சிறப்புக் கொண்டவர்கள். அவர்கள் மனநிலை என்ன என்பது அவர்களுக்கே புரிய இன்னொரு குழந்தை உடன் இருந்தால்தான் தெரியும். இல்லையேல் என் குழந்தை இப்பொதே பெரியவர்கள் போல் நடந்துக்கறான், ரொம்ப அதிகபிரசிங்கித் தனமா பேசுறான் போன்ற பல பிரச்னைகள் உண்டாகும். இதற்குக் காரணம் குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெரிவர்களை பார்த்து நடந்து கொள்கிறான். இது இங்கே மட்டும் நிற்காது, பள்ளியில் கூட சக குழந்தைகளை பின்பற்றாமல், ஆசிரியர்கள், பெரியவர்கள் எனப் பார்த்து அவர்களைப் போல் பேச, நடக்க ஆரம்பிக்கும் போது மிகச் சில காலங்களிலேயே குழந்தைக்கான குணம் இல்லாமல் குழந்தை அதீத பெரியவர்கள் போன்ற மனநிலை காட்டுவான். இதனால்தான் அந்தந்த வயதில் என்ன நடக்க வேண்டுமோ அது நடக்க வேண்டும் எனப் பெரியவர்கள் கூறினர். உடலும் மனமும் வயதுக்கெற்ப மாற்றமும், வளர்ச்சியும் அடைந்தால்தான் அது ஆரோக்கியம்.

அன்று விடுமுறை என்றாலே குழந்தைகள் தாத்தா பாட்டி வீடு, அங்கு உறவுக்கார குழந்தைகள், என இருப்பர் இன்று அந்த நிலை இல்லை. வீட்டிற்கு ஒரு குழந்தை, அந்தக் குழந்தையும் பெற்றோர் கண் எதிரில் இருக்க வேண்டும் என்கிற மனநிலையால் குழந்தைகள் தனிமையாக்கப்படுகிறார்கள். இதெல்லாம் குறையத்தான் ப்ரீ-ஸ்கூல் தேவை. ப்ரீ – ஸ்கூலுக்கு அம்மா – குழந்தை இருவரும் ஒருசேர மனதைப் பழக்கிக் கொள்ள வேண்டும். ஏனேனில் தாயின் மனநிலைதான் குழந்தையின் மனநிலையையும் தீர்மானிக்கும். பள்ளிக்கான தயார்நிலை (School Readiness): இது வழக்கமாக தயார் நிலைதான். சீரான தூக்கம், உணவுப் பழக்கங்களில் மாற்றம், ஆரோக்கியமான உணவுகள், விடுமுறை முடியும் வரை தாமதிக்காமல் ஒரு வாரம் முன்பிருந்தே பள்ளிக்கான ஆயத்த நிலைகள், வாழ்வியலில் மாற்றம் இவற்றைக் கொண்டு வருவது. மேலும் வீட்டில் கூட சேட்டை செய்தால் ஸ்கூலில் விட்டுவிடுவேன், டீச்சரிடம் சொல்லிவிடுவேன் என்பது போல் பள்ளி என்றாலே பயமுறுத்தும் மனநிலையை தவிர்ப்பது நல்லது. பள்ளிக்கூடம் குறித்த நேர்மறை வார்த்தைகள், அதனால் உண்டாகும் நன்மைகள் குறித்து நிறைய பேசுங்கள். அதுவே போதுமானது. சுருக்கமாக வீட்டில் இருக்கும் போது பள்ளியை மிஸ் செய்யும் தருணங்களை உண்டாக்குங்கள். பள்ளி திறக்கும் நாளை எதிர்பார்த்து குழந்தைகள் காத்திருப்பார்கள்.
– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi