பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்புக்கு, கடந்த ஒரு மாதத்தில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், பொள்ளாச்சி உள்ளிட்ட வனச்சரகங்களில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். டாப்சிலிப்க்கு, ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின்போது வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மே மாதம் துவக்கத்தில் இருந்து, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் வெளி மாவட்டங்களில் இருந்து டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.மேலும், அவ்வப்போது வனப்பகுதியில் பெய்த கோடை மழையால், டாப்சிலிப்பில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இந்த சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
டாப்சிலிப் வந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலும், வனத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்ட வாகனத்தில் கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு சென்று வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதன் மூலம், வனத்துறைக்கு பல லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைபோல், இந்தமுறையும் பள்ளி கோடை விடுமுறையின்போது டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப்புக்கு, பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் 25ம் தேதி வரை தினமும் சுமார் 150 முதல் 200 சுற்றுலா பயணிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்தனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நாளொன்றுக்கு சராசரியாக 800 முதல் ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை வந்திருந்தனர். இதிலும் பெரும்பாலானோர் வெளியூர்களில் இருந்தே வந்துள்ளனர் என்றனர்.