ஏற்காடு : ஏற்காடு கோடை விழாவையொட்டி, படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பக்கூடிய இடமாக ஏரி பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா நடுவில் இயற்கை அழகுடன் அமைந்துள்ள படகு இல்லம் விளங்குகிறது. சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்தவாறு, படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
இதற்காக அங்குள்ள ஏரியில், மோட்டார் படகுகள் மட்டுமின்றி மிதி படகு மற்றும் துடுப்பு படகுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே, ஏற்காட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி பிரசித்தம். இந்த ஆண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வர்ணம் பூசும் பணியும் தொடங்கும்.