நன்றி குங்குமம் தோழி
கோடையில் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் தலைமுடியின் க்யூட்டிகளை சேதப்படுத்தும். இதனால் ஈரப்பதம் குறைந்து, முடி வறண்டு, உடைவதற்கு வாய்ப்புள்ளது. கோடையில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை காரணமாகவும் தலைமுடி உதிர வாய்ப்புள்ளது. சூரியனின் தாக்கத்தில் இருந்து தலைமுடியைப் பாதுகாக்க வெளியே செல்லும் போது தொப்பியை அணியுங்கள். தொப்பியை அணியும் முன்பு தலையை மெல்லிய துணியினால் கட்டிக்கொண்டு பிறகு தொப்பியினை அணியலாம். அல்லது ஸ்கார்ஃப் அணிவதாலும் தலைமுடிக்கு முழு பாதுகாப்பை வழங்க முடியும்.
புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து தலைமுடியினை பாதுகாக்க பல முடி பராமரிப்பு பொருட்கள் உள்ளன. அதனை தலைமுடிக்கு ஏற்ப பயன்படுத்தலாம். கோடை காலத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் தேவை. தலைக்கு அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் அகன்று தலைமுடி மேலும் உலர்ந்துப் போக வாய்ப்புள்ளது. வாரத்தில் 2-3 முறை கண்டிஷனிங் பயன்படுத்தி தலைமுடியினை அலசுவது நல்லது.
கோடையில் சருமம் மட்டுமில்லை தலைமுடியையும் நீரேற்றமாக வைப்பது அவசியம். நிறைய தண்ணீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. சூரிய ஒளியில் வெளிப்படும் போது தலைமுடி நுனியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க பின்னல், குதிரைவால் அல்லது பன் கொண்டை என சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்.
ப்ளோ ட்ரையனர்கள், ஸ்ட்ரைட்டனர்கள் மற்றும் நிறங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இது தலைமுடியினை சேதப்படுத்தும். அதற்கு பதில் இயற்கை முறையிலான சிகை அலங்காரங்களை முயற்சிக்கலாம். நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் கலக்கப்பட்ட தண்ணீரால் நீச்சல் பயிற்சி எடுப்பவர்களின் தலைமுடி பாதிக்கப்படும். அதற்கென மார்க்கெட்டில் உள்ள ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துங்கள்.
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களால் மசாஜ் செய்வது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்கும். சில துளி லாவெண்டர் எண்ணெயினை அத்தியாவசிய எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
கோடையில் தலைமுடிக்கு கலரிங் செய்வதை தவிர்க்கவும். முடி ஆரோக்கியமாக இருக்க கலரிங் செய்யப்பட்ட முடிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது அவசியம்.
உலர் தலைமுடி உள்ளவர்கள் ஆழமான கண்டிஷனிங் மாஸ்க் பயன்படுத்துவது சிறந்தது. இது முடி உதிர்வதை கட்டுப்படுத்தி, முடிக்கு ஊட்டமளிக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கோடையில் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கலாம்.