சூலூர்: நள்ளிரவில் மருத்துவமனை சுவரில் பைக் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலியாகினர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் சக்தி (18). இவர், அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஏ வரலாறு படித்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் மகன் கண்ணன்(19). இவர், சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சக்தி, தான் புதிதாக வாங்கிய ைபக்கில் நண்பர் கண்ணனுடன் ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு நேற்று நள்ளிரவில் சினிமா பார்க்க சென்றனர். 2ம் காட்சி முடிந்து நள்ளிரவில் பைக்கில் வீடு திரும்பினர். பைக்கை சக்தி ஓட்டினார். அப்போது சூலூர் எல்என்டி பைபாஸ் சிந்தாமணிபுதூர் பகுதியில் சாலையை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் அருகே இருந்த தனியார் மருத்துவமனை காம்பவுண்ட் சுவற்றில் மோதியது.
இதில் படுகாயமடைந்த 2 மாணவர்களும் சம்பவயிடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த சூலூர் போலீசார் 2 பேரின் சடலத்தையும் மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதியதாக வாங்கிய பைக்கில் பயணித்த நண்பர்கள் இருவர் விபத்தில் பலியானது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.