சிரியா: சிரியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகினர். சிரியாவில் கடந்த 13 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர் கடந்த டிசம்பரில் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்பான ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. ஆனால், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அல்-அசாத் ஆட்சி வீழ்ந்த பின்னர் உருவான பாதுகாப்பு வெற்றிடத்தைப் பயன்படுத்தி, ஆயுதங்களை கைப்பற்றி, தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் மாலை, டமாஸ்கஸின் டுவைலா பகுதியில் உள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் புனித எலியாஸ் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. சிரிய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த மக்களை துப்பாக்கியால் சுட்டான்; பின்னர் வெடிகுண்டு கவசத்தை வெடிக்கச் செய்தான். இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்; 63 பேர் காயமடைந்தனர்.