புதுடெல்லி: ஆன் லைன் விளையாட்டால் தற்கொலை அதிகரிப்பதால் தான் அதற்கான தடை சட்டம் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து அந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தது.
இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு,‘‘போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என தெரிவித்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து இந்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக ஆன்லைன் ரம்மி மற்றும் விளையாட்டு நிறுவனங்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததோடு, தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை உயர்நீதிமன்றம் எதனால் ரத்து செய்தது என நீதிபதி அனிருத்தா போஸ் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், ‘‘ஆன் லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் தற்கொலை அதிகரிக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் தமிழ்நாடு அரசு அதற்கான தடை சட்டத்தை இயற்றியது. அதனை கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினம் இதுப்போன்ற வழக்குகள் விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.