புழல்: செங்குன்றம் அருகே மாமியார் திட்டியதால் மனமுடைந்த மருமகள், மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆவதால் பொன்னேரி ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் அவுன்சங் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் ராஜ். இவரது மனைவி அனுப் பிரியா (27). இவர்கள் இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை ஃப்ரிட்ஜில் வைத்திருந்த ஐஸ்கிரீம் கீழே கொட்டிகிடந்துள்ளது.
இதை பார்த்து கோபமடைந்த அனுப்பிரியாவின் மாமியார் சித்ரா, அனுப்பிரியாவை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அனுப்பிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை சாத்தி கொண்டு மின்விசிறி கொக்கியில் தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்ற கணவர் அஸ்வின்ராஜ் வீடு திரும்பியபோது, மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்த தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனுப்பிரியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அனுப்பிரியாவுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆவதால் பொன்னேரி ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் செங்குன்றம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.