சுகாதார அமைப்பின் (WHO) இறப்பு விகிதப்படி, 15-19 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினரிடையே உலகளாவிய தற்கொலை விகிதங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 130 உலக சுகாதார அமைப்பு உறுப்பு நாடுகளில் 90 நாடு களில் இருந்து (சில சந்தர்ப்பங்களில் பகுதிகளில்) இந்தத் தரவுக் கிடைத்துள்ளது. பதின்பருவ தற்கொலை விகிதம், சமீபத்திய ஆண்டுக்கான தரவுகளின் அடிப்படையில், 7.4/100,000 ஆகும். பெண்களை விட (4.1) தற்கொலை விகிதம் ஆண்களில் (10.5) அதிகமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்காக இந்தியா, சீனா, கியூபா, ஈக்வடார், எல் சால்வடார் மற்றும் இலங்கை நாடுகளில் மட்டும் பெண்களின் தற்கொலை விகிதம் ஆண்களை விட அதிகமாக இருக்கிறது. 90 நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டதில், இளம் ஆண்களின் இறப்புக்கு தற்கொலை நான்காவது முக்கிய காரணமாகவும், இளம் பெண்களுக்கு மூன்றாவது முக்கிய காரணமாகவும் இருக்கிறது. என்ன செய்யலாம் சொல்கிறார் உளவியல் மருத்துவர் கே. ஆர்த்தி.
தற்கொலை எண்ணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
1. எதற்குமே பேசுவதுதான் முதல் தீர்வு. நம்பிக்கையான நபரிடம் அல்லது நண்பரிடம் பேச முயற்சி செய்யுங்கள்.
2. உங்கள் மனநிலை மாற்றம் பெறு வதில் கடினம் தென்படுகிறதா, யோசிக்காமல் தனியான அறையாக இருப்பின் அவ்விடத்தை விட்டு உடனே வெளியேறுங்கள்.
3. தனிமைதான் இப்படியான சூழலில் வில்லன். எனவே கூடுமானவரை குடும்பத்துடன் செலவிடவும்.
4. பெற்றோரைக் காட்டிலும் நமக்கு நன்மை செய்யக் கூடிய உள்ளங்கள் வேறு யார் எதுவாயினும் அவர்களிடம் சொல்லிவிட்டு உங்கள் மனநிலையை லேசாக்குங்கள்.
5. முதலில் கோபமடையத்தான் செய்வார்கள், பரவாயில்லை. ஆனாலும் அவர்களது மகன்/மகளை அப்படியே விட்டுவிட மாட்டார்கள்.
6. உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் நம்பிக்கை இருப்பின் உதவி கேளுங்கள். தவறில்லை.
7. உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு யோசிக்கும்போது இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் நம் பிரச்னையை சொல்லிவிட்டு அதற்குத் தீர்வு கிடைக்குமா எனக் காத்திருக்கலாமே.
8. எந்தக் காரணமுமே இல்லாமல் தற்கொலை எண்ணமோ அல்லது தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணம் மோலோங்கி இருந்தால் தக்க மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
9. ஒரு சில பிரச்னைகளுக்கு தூக்கமே நல்ல மருந்தாக இருக்கும்.
10. யாரேனும் மிரட்டுகிறார்கள் எனில் யோசிக்காமல் காவல் நிலைய உதவியை நாடுவதற்கு தயங்காதீர்கள்.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்.
1. முதலில் அவர்கள் எந்த நவீன தொழில்நுட்பங்களான மொபைல், இணையதளம், ஸ்மார்ட் வாட்ச் என எதுவாயினும் உங்கள் கண் பார்வையில் பயன்படுத்தும்படி சூழலை உருவாக்குங்கள்.
2. தனியறை இப்போதைய வாழ்வியல் சகஜம்தான். ஆனாலும் வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கும் போது குடும்பத்தாருடன் நேரம் செலவிடும்படி சூழலை ஏற்படுத்துங்கள்.
3. தினமும் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும், அன்பாக சில வார்த்தைகள், என்ன நடந்தது என்னும் கேள்விகள், அல்லது நீங்கள் அலுவலகத்தில் சந்தித்த பிரச்னைகள் எனப் பகிர்வதன் மூலம் அவர்கள் அவர்களின் நாள் குறித்த விஷயங்களைப் பகிர்வார்கள்.
4. திடீரென வரும் நண்பர்கள், அவர்கள் குறித்த விவரங்கள் கேட்டறிந்து கொள்ளுங்கள். அல்லது வீட்டிற்கு வரவழைத்து அல்லது பொது இடங்களில் சந்தித்து அவர்கள் குறித்த ஆய்வு முக்கியம்.
5. நன்றாக பேசிக் கொண்டிருந்த மகன்/மகள் திடீரென பேச்சை நிறுத்திவிட்டு அதிகம் தனிமையை நாடுகிறார்களா என்பதைக் கவனியுங்கள்.
6. எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சில விஷயங்களுக்கு நோ சொல்லிப் பழகுங்கள். இல்லையேல் படிப்பில் இந்த மதிப்பெண் வாங்கினால் அல்லது இந்த வேலையைச் செய்தால் வாங்கித் தருவேன் எனக் கூறி வாழ்க்கையில் எதுவும் இலவசமாகக் கிடையாது என்னும் உண்மையை ஆழமாகப் பதியச் செய்யுங்கள்.
7. உருவம் குறித்த கேலிகள், நிறப் பாகுபடு குறித்து விழிப்புணர்வுகள் அனைத்தும் சொல்லிக் கொடுக்க வேண்டியதும் கடமை. மேலும் ஜாதி, சமய பாகுபாடும் தேவையில்லை என்பதையும் புகட்டுங்கள். காரணம் இன்று இந்தப் பிரச்னையெல்லாம் நவீனத்துவம் பெற்று டிஜிட்டலில் நடந்து கொண்டிருக்கிறது.
8. அவர்களின் விருப்பு வெறுப்பு, எந்த ஹீரோ, ஹீரோயின், பாப் பாடகர்கள் மேல் ஆர்வம் என அனைத்தும் கூட இன்று பெற்றோர்கள் அறிய வேண்டியது அவசியம்.
9. குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள், சினிமா, குடும்பத்துடன் ஹோட்டல், கோவில்கள், உறவினர்கள் விழாக்கள், திருமணங்கள் இதெல்லாம் அவசியம்.
10. எதுவாயினும் என்னிடம் சொல், உன் மீது தவறே ஆனாலும் பரவாயில்லை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்னும் ஆறுதலும் தைரியமும்தான் இன்றைய சூழலுக்கு பல இளைஞர்களுக்குத் தேவைப்படுகிறது.
– கவின்