சென்னை: தற்கொலை செய்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நேற்று அடக்கம் செய்ப்பட்டது. மீராவின் உடலுக்கு சினிமா பிரபலங்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். சினிமா நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மீரா சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மீரா கடந்த திங்கள்கிழமை தனது நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீராவின் உடலை தேனாம்பேட்டை போலீசார் பிரேத சோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே உடற்கூறு ஆய்வு முடிந்து நேற்று மதியம் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி பாத்திமாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு வந்த மீராவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் உடன் படித்த சக மாணவர்கள், சினிமா பிரபலங்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மீராவின் உடலை வேனில் ஏற்றும் போது, அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அங்கு இருந்த பொதுமக்களிடையே கண்ணீர் வர வழைத்தது. பிறகு மீராவின் உடல் வேனில் ஏற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக உடல் எடுத்து செல்லப்பட்டது. அப்போது பொதுமக்கள் மீராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேன் பின்னால் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். இறுதியாக கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.