சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி சுட்டிக்காட்டுவதற்கு முன்பே, பூச்சி, நோய் வருமுன் காப்போம் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கரும்பு பயிர் நல்ல முறையில் வளரவும், கரும்பு விவசாயிகளுக்கு அவ்வப்போது நிவாரணம் வழங்கவும், அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கரும்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், பூச்சி தாக்குதல் மற்றும் மஞ்சள் அழுகல் நோய் தாக்குதல் ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கரும்பு இனபெருக்க நிறுவனம், கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூலம் கருத்தரங்குகள், பயிற்சிகள், வயல் விழாக்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கரும்பு பயிர் காட்டுப்பன்றியால் பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்கும் பொருட்டு கரும்பு விவசாயிகளுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் தயார் செய்யப்படும் காட்டுப்பன்றி விரட்டும் திரவம் கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை ஆலைகளில் காலியாக உள்ள பொது தொகுப்பு அலுவலர்கள் மற்றும் ஊதிய குழுவின் கீழ் உள்ள பணியாளர்களின் காலிப் பணியிடங்கள் ஆலைகள் தேவைகளை கருத்தில் கொண்டு விரைந்து நிரப்பிட நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசு கருணை அடிப்படையில் பணிநியமனமும், சுமார் 170 பேருக்கு பதவி உயர்வும் வெவ்வேறு நிலைகளில் அளிக்கப்பட்டது. கோரிக்கை வைக்காமலேயே ஊதிய உயர்விற்காக மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டு, வெகுவிரைவில் ஊதிய உயர்வும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகள் நலன் பாதுகாக்கப்பட்டது.
இவ்வாறு கேட்காமலேயே கொடுக்கும் இந்த அரசின் செயல்பாட்டால், தற்போது கரும்பு பிழிதிறன் உயர்வும், சர்க்கரை கரும்பு பரப்பளவு உயர்வு, கரும்பு விவசாயிகளின் எண்ணிக்கை உயர்வு இந்த அரசின் சாதனையாகும். கரும்பு விவசாயிகளை கண் போல காத்து, அவர்களுக்கு ஏற்படும் துயரங்களை துடைத்திட அரசு எப்பொழுதும் நேச கரம் நீட்டிக் கொண்டே இருந்ததன் விளைவாக கரும்பு உற்பத்தி பரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் கல்லாப் பெட்டி எடப்பாடி சுட்டிக்காட்டுவதற்கு முன்பே, பூச்சி, நோய் வருமுன் காப்போம் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கரும்பு பயிர் நல்ல முறையில் வளர்ந்திடவும், கரும்பு விவசாயிகளுக்கு அவ்வப்போது நிவாரணம் வழங்கிடவும், அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எந்த ஒரு கரும்பு விவசாயியும் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் வழிகாட்டுதல்படி, எல்லா நடவடிக்கைகளும் சிறப்பாக இத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை வைக்காமலேயே அவர்களுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகை மற்றும் ஊக்கத் தொகை ஆகிய பணப்பயன்கள் யாவும் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் விடியாமல் இருந்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையின் மூலம், தமிழக விவசாயிகள் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.