ஊட்டி : ஊட்டியில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள ஏடிசி நிழற்குடையில் போதிய இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் ஊட்டி நகருக்கு வந்து செல்கின்றனர். பின்னர், இவர்கள் மீண்டும் தங்களது கிராமப்புறங்களுக்கு செல்வதற்காக ஏடிசி., பஸ் நிலையத்திற்கு செல்கின்றனர். அங்கு வெகு நேரம் காத்திருந்தே தங்களது கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
ஆனால், அங்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை போதுமானதாக இல்லை. பல ஆயிரம் பேர் வந்து செல்லும் இப்பகுதியில் சுமார் 20 பேர் நிற்கும் அளவிற்கே நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், 10 பேர் மட்டுமே அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெகு நேரம் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் தரையிலேயே அமர வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. சிறிய மழை பெய்தால் கூட பயணிகள் அனைவரும் இந்த சிறிய நிழற்குடையில் நிற்க வேண்டியுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போதிய இருக்கைகளும் இல்லாததால் வெகு நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது.
ஊட்டி ஏடிசி பகுதியில் கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக நிழற்குடையை பெரிதுபடுத்த வேண்டும். இப்பகுதியில் கூடுதலாக நிழற்குடை அமைக்க வேண்டும். இருக்கைகள் கூடுதலாக அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.