கோலாலம்பூர்: உலக பேட்மின்டன் கூட்டமைப்பு நடத்தும் போட்டிகளில் முக்கியமான போட்டியாக சுதிர்மன் கோப்பை பைனல்ஸ் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கலப்பு குழு போட்டியான இதில் பிப்ரவரி மாத தரவரிசையில் முதல் 16 இடங்களில் இருந்த நாடுகள் பங்கேற்க உள்ளன. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த 19வது தொடர் சீனாவின் ஜியாமெனில் ஏப்.27ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை நடைபெறும். இந்தப்போட்டி ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் என தலா 2, கலப்பு இரட்டையர் என மொத்தம் 5 ஆட்டங்கள் இரு அணிகளுக்கு இடையே நடைபெறும்.
எந்த அணி, எந்த அணியுடன் மோதுவது என்பதை முடிவு செய்வதற்கான குலுக்கல் உலக இறகுபந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று நடந்தது. சீனாவில் நடந்த இந்த குலுக்கல் மூலம் வலுவான அணிகள் இடம் பிடித்துள்ள டி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. குலுக்கல் முடிவில் ஏ பிரிவில் சீனா, ஹாங்காங் , தாய்லாந்து, அல்ஜிரியா, பி பிரிவில் தென் கொரியா, சீன தைபே, கனடா, செக் குடியரசு, சி பிரிவில் ஜப்பான், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டி பிரிவில் இந்தியா, இந்தோனேசியா, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.