சென்னை: திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயில் பெட்டியில் திடீரென கரும்புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருவள்ளூரில் இருந்து ஆவடி வழியாக இன்று காலை 7.45 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி ஒரு புறநகர் மின்சார ரயில் வந்தது. இந்த ரயில் ஆவடியில் இருந்து கொரட்டூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வில்லிவாக்கம் நோக்கி வந்துகொண்டிருந்தது. கொரட்டூர்-வில்லிவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரயில் வந்தபோது ஒரு பெட்டியிலிருந்து திடீரென கரும்புகை வெளியானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு கரும்புகை எழுந்த பெட்டியில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதன்பிறகு கரும்புகை எழுந்த ரயில்பெட்டியை தனியாக கழற்றி, ஆவடி ரயில்வே பணிமனையில் பழுதுபார்க்க கொண்டு சென்றனர். இதன்பின்னர் அந்த பெட்டி கழற்றப்பட்டதும் மற்ற பெட்டிகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ட்ரல் நோக்கி புறநகர் மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. இதன்காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக ரயில் பெட்டியில் கரும்புகை எழுந்ததா, வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். இதுசம்பந்தமாக ரயில்வே அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.