சென்னை: சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 9.40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பேருடன் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக இழுவை வண்டிகள் மூலம், விமானம் ஓடுபாதையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.