*1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் ரயில்வே கேட் திடீரென மூடப்பட்டதால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரயில் கேட் திறந்த பிறகு இந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 90% முடிவடைந்த நிலையில், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி மட்டுமே ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ரயில்வே மேம்பால வேலை நடைபெறுவதால் கடந்த சில மாதங்களுக்கு முன் தென்காசியிலிருந்து வரும் கனரக வாகனங்கள் கடையம் வழியாகவும், அரசு பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வவிநாயகபுரத்தில் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக நெல்லைக்கும், நெல்லையிலிருந்து தென்காசி வரும் வாகனங்கள் மலையராமபுரம் வழியாக கல்லூரணிக்கு சென்று வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் ஒருவழிப்பாதையாக எவ்வித முன்னறிவிப்பின்றி பாவூர்சத்திரம் ரயில்வே கேட் வழியாக தென்காசி சென்று வந்தது. ஒருவழிப்பாதை மாற்றியதுடன் தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அரசு பஸ் தவிர மற்ற வாகனங்கள் இவ்வழியாக வந்தது. இதனால் இரு வழிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதில் ரயில் செல்லும் வரை ரயில்வே கேட் மூடப்படுவதால், கேட் திறந்தவுடன் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் எவ்வித முன்னறிவிப்பின்றி ரயில் இன்ஜின் மட்டும் பாவூர்சத்திரம் ரயில்வே நிலையத்திலிருந்து பராமரிப்பு பணி மேற்கொள்வதாக கூறி தென்காசி-நெல்லை தேசிய நெடுஞ்சாலை பாவூர்சத்திரம் ரயில்வே கேட் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் மூடப்பட்டது.
இதனால் இருபுறமும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. இதில் 108 ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சைக்காக தென்காசி மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.