Tuesday, April 16, 2024
Home » ஊருக்கு மட்டும்தான் உபதேசமா? வாரிசு அரசியல் பற்றி பேசும் பாஜவில் வாரிசுகளுக்கு சீட்

ஊருக்கு மட்டும்தான் உபதேசமா? வாரிசு அரசியல் பற்றி பேசும் பாஜவில் வாரிசுகளுக்கு சீட்

by Arun Kumar

எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும்போதெல்லாம் ‘வாரிசு அரசியல் செய்கிறார்கள்’ என குற்றம் சாட்டி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. எனக்கு குடும்பம் கிடையாது. மக்கள்தான் என் குடும்பம் என அவர் கூற, பாஜவினர் எல்லாம் தங்களை மோடி குடும்பம் என சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்ய ஆரம்பித்து விட்டனர். பாஜவில் வாரிசு அரசியலே இல்லை என்று காலங்காலமாக கூறிவருகின்றனர். ஆனால் எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என பாஜ கட்சியை சேர்ந்த பலரும் தங்கள் மகன், மகள், சகோதரர்களை அரசியலில் களம் இறக்கி விட்டுள்ளனர்.

* 45 எம்பிக்கள் வாரிசுகள்

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட 303 எம்பிக்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் 45 பேர், அதாவது 15 சதவீதம் பேர் வாரிசுகள் தான். இது மட்டுமின்றி, அமைச்சரவையிலும் 15 அமைச்சர்கள் வாரிசுகள்தான். பாஜ ஆண்ட/ ஆளும் மாநிலங்களில் 2 முதலமைச்சர்கள், ஒரு துணை முதல்வர் வாரிசுதான். பாஜகவின் 395 எம்.பி.க்களில் (மக்களவை மற்றும் மாநிலங்களவை உட்பட) சுமார் 12 சதவீதம் பேர் வாரிசுகள். அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு மற்றும் கர்நாடகாவின் பசவராஜ் பொம்மை ஆகிய 2 முதல்வர்களும் முன்னாள் முதல்வர்களின் மகன்கள். மகாராஷ்டிராவில், துணை முதல்வர் தேவேந்திர பட்னவிசின் தந்தை கங்காதர்பந்த் பட்னவிஸ், மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலிலேயே, பாஜ தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் தரப்பட்டிருக்கிறது. பாஜவின் 2வது பட்டியலில் கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா), மகாராஷ்டிராவில் பாஜ தலைவர் கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜ முண்டே, ஹரியானா மாநிலம் அம்பாலா தொகுதி எம்பி மற்றும் ஒன்றிய அமைச்சராக இருந்த மறைந்த ரத்தன் லால் கட்டாரியாவின் மனைவி பாண்டோ கட்டாரியா, வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த வேத்பிரகாஷ் கோயலின் மகன் பியூஷ் கோயல், முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவின் மருமகள் ரக்‌ஷா கட்சே, முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜோய் விகே, இமாசல பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலின் மகன் அனுராக் சிங் தாக்குர், பாஜ கூட்டணியில் உள்ள திப்ரா மோத்தா கட்சி நிறுவனர் பித்யோக் பிரக்ரமின் சகோதரி கிருதி சிங், எம்பி சஞ்சய் தோத்ரேவின் மகன் அனூப் தோத்ரே, முன்னாள் எம்பி துக்காராம் ரசிருங்காரேயின் மகன் சுதாகர் சிருங்காரே , பாஜ எம்எல்ஏ விஜய்குமார் கிருஷ்ணாராவ் காவித்தின் மகள் ஹீனா காவித், மறைந்த எம்பி மோகன் தேல்கரின் மனைவி கலாபென் தேல்கர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டுதான் இப்படி ஒரு டிரெண்ட் பாஜவில் தொடங்கியிருக்கிறது என்பதல்ல… பல ஆண்டுகளாகவே அந்தக் கட்சியில் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு துவக்கத்தில் மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கருக்கு பனாஜியில் சீட் தர பாஜ தலைமை மறுத்து விட்டது. பின்னர், அட்டனாசியோ மான்செரேட்டுக்கு கட்சி சீட் கொடுத்தது. இவரது மனைவி ஜெனிபர் மான்செரேட், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அரசில் அமைச்சராக இருந்தவர். இதேபோல், கோவா சுகாதாரத் துறை அமைச்சராக விஸ்வஜித் ரானே உள்ளார். அவரது மனைவி தேவியா ரானே போரியம் தொகுதி எம்.எல்.ஏ. விஸ்வஜித்தின் தந்தை பிரதாப்சிங் ரானே 6 முறை முதல்வராக இருந்தவர்.

மகாராஷ்டிராவில், காங்கிரஸ் தலைவரும், 7 முறை ஷீரடி எம்.எல்.ஏ.வுமான ராதாகிருஷ்ணா விகே-பாட்டீல் அகமதுநகர் எம்பி தொகுதியில் தனது மகன் சுஜய் விகே-பாட்டீல் வெற்றி பெற்ற பிறகு, 2019 ல் பாஜவில் இணைந்தார். ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் தந்தை பாலாசாகேப் விகே-பாட்டீல் வாஜ்பாய் அரசில் ஒன்றிய அமைச்சராக இருந்தவர். இதேபோன்று, மகாராஷ்டிராவில் மும்பை வடக்கு மத்திய தொகுதி எம்பி பூனம் மகாஜன் மூத்த பாஜ தலைவர் பிரமோத் மகாஜனின் மகள். இதுபோல் பாஜ தேசிய செயலாளர் பங்கஜ முண்டே மற்றும் பீட் தொகுதி எம்பி பிரீதம் முண்டே ஆகியோர், பிரமோத் மகாஜனின் சகோதரரும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் துணை முதல்வருமான கோபிநாத் முண்டேயின் வாரிசுகள். தற்போது பிரீதம் முண்டேவுக்கு பதிலாக பங்கஜ முண்டேவுக்கு பீட் தொகுதியில் சீட் கொடுத்துள்ளது பாஜ. கர்நாடகாவிலும் நிலைமை வேறுபட்டதல்ல முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா குடும்பத்திலிருந்து தொடங்கி, பல உதாரணங்கள் உள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி உட்பட 13 மாநிலங்களில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, தங்கள் கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் தரப்போவதில்லை என்ற முடிவை எடுத்தது. அப்போது பாஜ சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் பலர் படு மோசமான தோல்வியை அடைந்தனர். அப்படியானால், அந்த தொகுதிகளில் வாரிசுகளுக்கு சீட் தராததால் உள்குத்து வேலையில் கட்சி தலைவர்களே ஈடுபட்டார்களா என்ற கேள்வியும் எழுந்தது. அந்த நேரத்தில், தலைவர்களின் வாரிசுகள் உறவினர்களுக்கு சீட் வழங்கக் கூடாது என்பதில் பாஜ எவ்வாறு செயல்படுகிறது என ஜே.பி நட்டா விளக்கினார்.

தேர்தலில் சீட் வழங்கும்போது ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்தான் என்ற கறாக கட்சி அறிவித்தது. இதுபோல், இமாசல பிரதேசம் குல்லுவில் வேட்பாளராக மகேஷ்வர் சிங் அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் திரும்பப் பெறப்பட்டு, அமைச்சரும் 7 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மகேந்திர தாக்கூரின் மகன் ரஜத் தாக்கூரை அவரது பாரம்பரிய தொகுதியான சோலனில் பாஜ களமிறக்கியது. ‘ஒரு குடும்பம் ஒரு சீட்’ என்ற கொள்கையை கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்வதாக கூறிக் கொள்ளும் பாஜ, இப்படி பல ஆண்டுகளாக முக்கிய தலைவர்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் சீட் தருவதையும், பதவிகளில் அமர வைப்பதையும் பாரம்பரிய வழக்கமாகவே பாஜ கடைப்பிடித்து வந்திருக்கிறது. இதெல்லாம் வாரிசு அரசியல் கிடையாதா? என்ற கேள்விக்கு ‘மோடியின் குடும்பம்’ என கூறிக் கொள்ளும் பாஜவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

* பாட்டி, மகள்கள், பேரன்கள்

துவக்கத்திலிருந்தே ராஜ வம்சத்தின் மீதான ஈர்ப்பு பாஜவுக்கு இருந்திருக்கிறது. உதாரணமாக, கட்சி நிறுவனர்களில் ஒருவராக இருந்த விஜயராஜே சிந்தியாவைச் சொல்லலாம். அவரது மகள்களில் ஒருவர் ராஜஸ்தான் முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே; மற்றொருவர் மத்திய பிரதேச அரசில் அமைச்சராக இருந்த யசோதரா ராஜே சிந்தியா. இவர்கள் கட்சியில் எப்போதும் அதிகாரமிக்க பதவியில் உள்ளவர்கள். வசுந்தராவின் மகன் துஷ்யந்த் சிங் ஜலவார்-பரன் தொகுதி பாஜ எம்.பி., பேரன் ஜோதிராதித்யா தாமதமாக பாஜவில் கட்சியில் சேர்ந்தாலும், அவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பாஜவில் எந்த அளவுக்கு கட்சிப் பொறுப்பு முதல் அனைத்து பதவிகளிலும் வாரிசுகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

 

You may also like

Leave a Comment

4 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi