புதுடெல்லி: எந்த சூழலிலும் வெற்றி பெற தெரிந்த, வெற்றியை உறுதி செய்ய விரும்பும் புதிய இந்தியாவின் அடையாளம் சந்திரயான்-3’ என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் நேற்று உரையாற்றியதாவது:சந்திரயான்-3 நிலவை அடைந்து 3 நாட்களுக்கும் மேலாகி விட்டது. இந்த வெற்றி மிகப்பெரியது. அதனால் அதைப் பற்றி எவ்வளவு விவாதித்தாலும் போதாது. அனைத்திலும் வெற்றி பெற விரும்பக் கூடிய, எந்த சூழலிலும் வெற்றியை உறுதி செய்யத் தெரிந்த புதிய இந்தியாவின் அடையாளம் சந்திரயான்-3 இந்த திட்டத்தின் இன்னொரு பக்கத்தை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். சந்திரயான்-3 பெண்களின் சக்திக்கான எடுத்துக்காட்டாகவும் உள்ளது.
பெண்கள் சக்தியின் வல்லமை இணையும் போது, அங்கு சாத்தியமில்லாதவை கூட சாத்தியமாகின்றன. அதன்படி, சந்திரயான்-3 திட்டத்தில் பல பெண் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். அவர்கள் தனித்தனி அமைப்புகளின் திட்ட இயக்குநர், திட்ட மேலாளர் என பல முக்கிய பொறுப்புகளை நிர்வகித்துள்ளனர். நம் பாரத பெண்கள் இப்போது, எல்லையில்லாதது என கருதப்படும் விண்வெளிக்கே சவால் விடுகின்றனர். நாட்டின் பெண்கள் இத்தனை தீவிர ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால், அந்த நாட்டின் வளர்ச்சியை யாரால் தடுத்துவிட முடியும்.
இனிவருங்காலத்திலும் கூட, நமது விண்வெளித்துறை, அனைவரின் முயற்சியின் வாயிலாக, இப்படி கணக்கற்ற வெற்றிகளை ஈட்ட வேண்டும் என விரும்புகிறேன். நமது தேசத்தின் திறமைக்கு அடுத்த சாட்சியாக, அடுத்த மாதம் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நடக்க உள்ளது. ஜி20 அமைப்பிற்கு தலைமை ஏற்ற பிறகு, ஓராண்டில் நாட்டின் 60 நகரங்ளில் 200 கூட்டங்களை நடத்தி உள்ளோம். இதன் மூலம் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டங்களில் பங்கேற்று இந்தியாவில் பன்முகத்தன்மையின் பலதரப்பட்ட திறன்களை காணும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். இந்தியாவின் எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். சில நாட்கள் முன்பாக சீனாவில் உலக பல்கலைக்கழக விளையாட்டுக்கள் நடந்தன.
அதில் இந்தியா இதுவரை நிகழ்த்தியிராத சாதனை புரிந்திருக்கிறது. நமது விளையாட்டு வீரர்கள் 11 தங்கம் உட்பட 26 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். 1959 முதல் இன்று வரை நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்றிருந்த மொத்த பதக்கங்கள் வெறும் 18 மட்டுமே; ஆனால் இந்த முறை நமது விளையாட்டு வீரர்கள், 26 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் உலக சமஸ்கிருதம், தெலுங்கு தினம் மற்றும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். நம் வழிபாட்டுத் தலங்களையும், அதன் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
* டிஜிட்டல் புரட்சியின் மையம் இந்தியா
இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பி20 பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆண்டுதோறும் ‘சர்வதேச நுகர்வோர் நலன் காக்கும் தினம்’ கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தினார். தொழில்துறையின் புதிய சகாப்தத்தில் டிஜிட்டல் புரட்சியின் மையமாக இந்தியா இருக்குமென குறிப்பிட்ட அவர், உலகளாவிய விநியோக சங்கிலியில் நம்பகமான மற்றும் திறன் வாய்ந்த கட்டமைப்பில் முக்கியமான நாடாக இந்தியா இருப்பதாக கூறினார். மேலும், கிரிப்டோகரன்சி மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்பாக உலகளாவிய கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.