நாகர்கோவில்: கன்னியாகுமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் பத்மகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ‘பிஎம் சூரியகர்-முப்த் பிஜ்லி யோஜனா’ எனப்படும் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடு மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
1 கிலோ வாட் சூரிய ஒளிசக்தி மேற்கூரை மின்சார உபகரணங்கள் நிறுவ மானிய தொகை ரூ.30 ஆயிரம். 1 கிலோ வாட் சூரிய ஒளிசக்தி மேற்கூரை அமைக்க சுமார் 70 சதுர அடி இடம் மட்டுமே போதுமானது. தற்போது சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்கலம் மூலம் சேமித்து மின்தடை காலங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி இல்லாத நேரங்களில் பயன்படுத்தி மின்சார கட்டணத்தை வெகுவாக மின் நுகர்வோர் குறைத்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் அரசு வழங்கும் மானியம் நுகர்வோரின் வங்கி கணக்கில் சூரிய ஒளி மின்சக்தி திட்ட பணிகள் முடிவுற்ற 7 தினங்களிலிருந்து 30 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும். 1 கிலோ வாட் சூரிய ஒளி மின் சக்தி திட்டத்தில் ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை மின்சாரம் உற்பத்தியாகும்.
1 கிலோ வாட் வீடு மேற்கூரை சூரிய ஒளி மின்சார திட்டம் அமைக்க மூலதனசெலவு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும். இதில் ரூ.30 ஆயிரம் மானியம் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மூலதனம் தொகை சுமார் 5 வருட காலங்களில் மின்கட்டண சிக்கனத்தின் மூலம் திரும்ப பெறலாம். அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் கூடுதல் ஆவணங்கள் இன்றி மின்கட்டணம் ரசீது மட்டுமே பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். சூரிய ஒளி சக்தி மேற்கூரை அமைக்கும் பணியை பதிவு செய்யப்பட்ட வென்டர்கள் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
விண்ணப்பிப்பவர்கள் Registration pmsuryaghar.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது www.pmsuryaghar.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது www.solorrooftop.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது PM-suryaghar என்ற மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது ORTpm-Surya Ghar என்ற மொபைல் ஆப் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர் திட்டங்கள்-9445854568, உதவி செயற்பொறியாளர் மக்கள்தொடர்பு-9445854477, உதவி பொறியாளர் மேம்பாடு-9445854481 ஆகியோரை தொடர்பு கொண்டு நிவர்த்திப்பெறலாம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்தில் நுகர்வோர் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.