சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன்(50). திருவெண்காடு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு 9 மணியளவில் வீட்டில் கணேசன் இருந்தார். அப்போது அதே தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கலைவேந்தன்(28), கணேசன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசினார். வீட்டு வாசலில் விழுந்து பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது.
இந்த பெட்ரோல் குண்டு சிதறி வீட்டுக்குள் உட்கார்ந்திருந்த கணேசன் காயமடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் போலீசில் கலைவேந்தன் சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக கணேசன் வீட்டில் கலைவேந்தன் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து சீர்காழி கோர்ட்டில் இன்று கலைவேந்தனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.