சென்னை: ஜூலை 7ம் தேதி சுபமுகூர்த்த தினத்தன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிக்கை: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான ஜூலை 7ம் தேதி அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான ஜூலை 7ம் தேதி அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.