தென்காசி: தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சேலத்தில் வருகிற டிச.17ம் தேதி திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் மாநில திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
நேற்று தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்து விட்டு தென்காசிக்கு வந்த அவர் இரவில் குற்றாலத்தில் தங்கினார். இன்று (5ம் தேதி) காலை 10 மணிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற பணிகள், முடிவுறாத பணிகள், மாவட்டத்தின் எதிர்கால தேவைகள், திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பிற்பகல் 12 மணிக்கு தென்காசி புதிய பஸ்-ஸ்டாண்ட் அருகே சிவந்தி நகரில் தென்காசி தெற்கு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தென்காசி இசக்கி மகாலில், தென்காசி மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார். பின்னர் அங்கு மாலை 4 மணிக்கு நடைபெறும் தென்காசி மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.