புதுடெல்லி: எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்ய ஒன்றிய சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க டெல்லி, உபி, பீகார், மேற்கு வங்கம், மபி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
இதில் 2018ல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பீகார், கேரளா சிறப்பு நீதிமன்றம் நீக்கப்பட்டு, மற்ற 9 மாநிலங்களில் 10 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த தாக்கம் குறித்து விரிவான மதிப்பீடு செய்ய ஒன்றிய சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளை வழங்க ஐஐடி, ஐஐஎம், சட்டப்பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் பல்வேறு சீர்த்திருத்தங்களையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது டெல்லியில் உள்ள 2 சிறப்பு நீதிமன்றங்களில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. உபியில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தில், 1,137 வழக்குகளும், மபியில் 319 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 419 வழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.