தமிழகத்தில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனே சரிசெய்ய வேண்டுமென அறிவுறுத்தியிருந்தார். அதனுடன், அமைச்சரும் தான் சுற்றுப் பயணம் செல்லும் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவருகிறார்.
மறுபுறம் அமைச்சரின் உத்தரவைப் பின்பற்றி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17,810 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் உட்பட துறைசார் அதிகாரிகள் நேரில் சென்று மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் பணிகளை ஆய்வு செய்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆய்வு வரும் நாட்களிலும் தொடரும் எனவும் துறை அதிகாரிகள் தரப்பில் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.