சென்னை: நுங்கம்பாக்கத்தில் ஸ்டுடியோ நடத்தும் வீட்டிற்கு ரூ20 லட்சம் வாடகை பாக்கி தராமல் ஏற்றி வருவதாக துபாயில் வசித்து வரும் தம்பதி பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6வது தெருவில் பஷீலத்துல் ஜமீலா என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவர் தற்போது தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். இதனால் காலியாக இருந்த வீட்டை கடந்த 2021ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு மாதம் வாடகை ரூ.1.25 லட்சம் என்றும், அட்வான்சாக ரூ.12 லட்சம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஸ்டுடியோவதாக பயன்படுத்தி வருகிறார். இதற்கிடையே வீட்டு உரிமையாளர் வாடகையை ரூ.25 ஆயிரம் உயர்த்தினார். அதன் பிறகு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான வாடகை பணம் ரூ.18 லட்சம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் வீட்டின் உரிமையாளர் தனது வக்கீல் மூலம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகு மொத்த வாடகை பணம் ரூ.18 லட்சத்தில் ரூ.12 லட்சம் பணத்தை காசோலையாக யுவன் சங்கர் ராஜா வழங்கினார். மீதமுள்ள ரூ.6 லட்சம் பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார்.
ஆனால் அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரை வாடகை பணம் ரூ.14 லட்சம் மற்றும் ஏற்கெனவே கொடுக்க வேண்டிய ரூ. 6 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் பணத்தை கொடுக்காமல் யுவன் சங்கர் ராஜா வீட்டை காலி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து துபாயில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளரான பஷீலத்துல் ஜமீலா ஆன்லைன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளித்தார். மேலும், பஷீலத்துல் ஜமீலா உறவினர் முகமது ஜாவித் என்பவர் மூலம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.