காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கி பேசியதாவது: மக்களுக்கு நன்மைகளை செய்யக்கூடிய துறைகள் ஏராளமாக இருந்தாலும் பள்ளிக்கல்வி துறைக்குதான் அதிகமான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார்.
இதன்படி, தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை வளர்ச்சிக்கு ரூ.44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலமாக பள்ளி கட்டிடங்கள், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் பணியிடம் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படும். ஒரு நாடு முன்னேற்றம் கண்டு தன்னிறைவு பெறுவதற்கு கல்வியும், சுகாதாரமும் முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும். அதனால்தான் கல்வி வளர்ச்சிக்காக திமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு கூறினார்.