சென்னை: ‘‘ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பள்ளி மாணவர்கள் பைக் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால், அவர்களின் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், வேப்பேரி போக்குவரத்து போலீசார், புரசைவாக்கம் அண்ணாமலை சாலையில் உள்ள எம்.சி.டி.எம். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து நேற்று விழிப்புணர்வு எற்படுத்தினர்.
இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், பள்ளி முடிந்து போகும்போதும் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். பள்ளி மாணவர்களாகிய ஆகிய நீங்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டக்கூடாது. அப்படி வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் வாகனத்தை கொடுத்த பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்கப்படும்.
மாநகரம் முழுவதும் குற்றங்களை தடுக்க அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மீண்டும் படிக்கட்டில் பயணம் செய்தால் உங்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பெற்றோர்களை எச்சரித்தனர்.