Wednesday, July 9, 2025
Home செய்திகள்Showinpage இதுவரை 41 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர் மாணவர்களின் வெற்றிதான் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி: ‘வெற்றி நிச்சயம்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இதுவரை 41 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர் மாணவர்களின் வெற்றிதான் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி: ‘வெற்றி நிச்சயம்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Karthik Yash

சென்னை: நான் முதல்வன் திட்டத்தால் இதுவரைக்கும் 41 லட்சம் மாணவ – மாணவியர் பயனடைந்திருக்கிறார்கள். நல்ல வேலைவாய்ப்புகளை பெற்று உயர்ந்திருக்கிறார்கள். மாணவர்களின் வெற்றிதான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறினார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் கலந்துகொண்டு, ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘சக்சஸ்’! இதை நோக்கிதான் வாழ்க்கையில் எல்லோரும் உழைக்கிறோம். அப்படி ‘சக்சஸ்புல்’ மாணவர்களை உருவாக்கக்கூடிய ஒரு ‘சக்சஸ்புல்’ திட்டத்திற்கான உண்மையான ‘சக்சஸ் மீட்’ தான் இந்த வெற்றி விழா. அதுமட்டுமல்ல, “வெற்றி நிச்சயம்” என்று மற்றொரு புதிய முயற்சிக்கான தொடக்க விழாவும் கூட. ‘நான் முதல்வன்’ திட்டம் உருவாக்கப்பட்டது. அதை உருவாக்கியது திராவிட மாடல் அரசும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும்தான் என்று என்னால் நெஞ்சை நிமிர்த்தி பெருமையோடு சொல்ல முடியும்.

இன்றைக்கு வரலாறு காணாத வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. ‘தமிழ்நாட்டுக்கு வந்தால், திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள்‘ என்ற நம்பிக்கையோடு ஏராளமான நிறுவனங்கள் தொடர்ந்து வருவார்கள். நீங்கள் அவர்களுக்கான நம்பிக்கை மட்டுமல்ல; நீங்கள்தான் தமிழ்நாட்டின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையோடுதான் ‘நான் முதல்வன்’ என்று இந்த திட்டத்திற்கு நான் பெயர் வைத்தேன். என் நம்பிக்கையை காப்பாற்றும் உங்கள் எல்லோருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகள்.

நான் முதல்வன் திட்டத்தால் இதுவரைக்கும் 41 லட்சம் மாணவ – மாணவியர் பயனடைந்திருக்கிறார்கள். நல்ல வேலைவாய்ப்புகளை பெற்று உயர்ந்திருக்கிறார்கள். ‘அப்-ஸ்கில்’-க்காக நீங்கள் அதிகம் பணம் கட்டி எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்ல வேண்டியதில்லை. உங்கள் காலேஜ் கேம்பஸிலேயே வளர்ந்து வரும் நவீன தொழில்துறைக்கு ஏற்றவகையில், தொழில்நுட்ப திறன், தகவல் தொழில்நுட்பம், மொழி அறிவு, ஹேக்கத்தான்ஸ், இன்டர்ன்ஷிப் இதையெல்லாம் உள்ளடக்கி பயிற்சி அளிப்பது மூலமாக உங்கள் கனவுகளுக்கு சிறகுகளைத் தந்து, நான் முதல்வன் திட்டம் உங்கள் எல்லோரையும் இன்றைக்கு உயர்த்தி இருக்கிறது.

கடந்த இரண்டு, மூன்று மாதத்தில் நிறைய தேர்வுகளின் முடிவுகள் வந்தது. நான் முதல்வன் திட்டத்தில் படித்த பலருக்கு பெரிய பெரிய வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது. என்னுடைய பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், ஏதோ நானே வெற்றிபெற்ற மாதிரியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பேன். மாதிரி என்ன, உண்மையிலேயே அது என்னுடைய வெற்றிதான். தன் குடும்பத்தில் தன்னுடைய பிள்ளைகள் வெற்றி பெற்றால், ஒரு தந்தை அதை தன்னுடைய வெற்றியாகதான் கொண்டாடுவார்? அதனால்தான் உங்களை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

2023ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவை தொடங்கினோம். அதில், 1000 பேரை தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் ஏழாயிரத்து 500 ரூபாய் என்று பத்து மாதத்திற்கு ரூ.75 ஆயிரம் கொடுத்து, முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால், ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அவர்களின் டெல்லி பயணம் மற்றும் சிறப்பு பயிற்சிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். இதன் அவுட்-புட் என்ன தெரியுமா?

இந்தாண்டு யுபிஎஸ்சி கிளியர் செய்தவர்களின் எண்ணிக்கை 57. அவர்களில் 50 பேர், நான் முதல்வன் மாணவர்கள். யுபிஎஸ்சி மட்டுமல்ல, எஸ்எஸ்சி, பேங்க் தேர்வுகளுக்கும் ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்து, 510 பேரை டிரெயின் செய்ததில், 58 பேர் தேர்வாகியிருக்கிறார்கள். இப்படி, மாணவர்களுக்கு மட்டுமல்ல, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற மாதிரி பேராசிரியர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் நான் முதல்வன் திட்டத்தில் முன்னணி தொழில்நிறுவனங்கள் மூலமாக பயிற்சி அளித்து, இதுவரைக்கும் ஒரு லட்சம் பேருக்கு திறன்பயிற்சி சான்றிதழ் வழங்கியிருக்கிறோம்.

என்னை பொறுத்தவரைக்கும், தமிழ்நாடு என்றால், சிறந்த கல்வித்தரம், சிறந்த பயிற்சி, எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் உன்னதமான உயர்கல்வி என்று எல்லோரும் சொல்ல வேண்டும். அதை, இந்த நான் முதல்வன் திட்டம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. திறன் மேம்பாட்டை ஒரு பிரசஸ்சாக நினைத்து பயிற்சி கொடுக்கிறோம். அதனால்தான், இந்த திட்டத்தில் திறன் போட்டிகளையும் நடத்துகிறோம். கடந்த ஆண்டு டெல்லியில், நடந்த இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாட்டு மாணவர்கள் 87 பேர் – 61 பிரிவுகளில் கலந்துகொண்டு, 6 தங்கம் – 8 வெள்ளி – 9 வெண்கலம் – 17 சிறப்பு பதக்கங்கள் என்று 40 பதக்கங்களை வென்று, இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தார்கள்! அடுத்த ஆண்டு ஷாங்காய் நகரில் ‘உலகத் திறன் போட்டிகள்’ நடைபெறப் போகிறது.

அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான ‘தமிழ்நாடு திறன் போட்டிகள் – 2025’ பதிவுகள் இன்றைக்கு தொடங்குகிறது! நான் முதல்வன் தளத்தில் பதிவுசெய்து, இந்த போட்டியில் வெற்றிபெற உங்களை வாழ்த்துகிறேன். இந்த வெற்றிகளுக்கான அடித்தளத்தை பள்ளிகளிலேயே நீங்கள் அமைக்க வேண்டும் என்றுதான் பள்ளி மாணவர்களின் அறிவாற்றலை கண்டறிந்து மெருகேற்றும் நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் – பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவுத் திட்டம் – சமூக – பொருளாதார காரணங்களால் பள்ளிக்கல்விக்கு மேல் படிக்க முடியாத மாணவர்களின் உயர்கல்வியை உறுதிசெய்ய உயர்வுக்கு படி திட்டம், கிராமப்புற மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்க சிகரம் தொடு திட்டம், கல்லூரிக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவ – மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் – இப்படி பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அந்த வரிசையில்தான், இன்றைக்கு, ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தையும் தொடங்கி வைத்திருக்கிறேன். இந்த திட்டத்தைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால், உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 18 முதல் 35 வயதுள்ள படித்த வேலையில்லாத இளைஞர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்க இருக்கிறது! இதற்கான பயிற்சித் தொகையையும் திராவிட மாடல் அரசே ஏற்க இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், இலங்கை தமிழர்கள், மீனவ இளைஞர்கள், சிறுபான்மையினர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு இளைஞர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் என்று சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்ட பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் வழியாக கண்டறிந்து இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
அதுமட்டுமல்ல, தொலைதூர மாவட்டங்களில் இருந்து, பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு, உணவுடன் கூடிய இருப்பிட வசதியும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் சேர – ‘ஸ்கில் வாலட்’ என்ற செயலியை உருவாக்கியிருக்கிறோம். இந்த APP-ல், எந்த கம்பெனியில் வேலைவாய்ப்பு இருக்கிறது? அதற்கு என்ன பயிற்சி என்று எல்லா தகவல்களும் இருக்கும். இப்படி, தமிழ்நாட்டையே உயர்த்தும் உன்னதமான திட்டமாக இருக்கின்ற காரணத்தினால், ‘நான் முதல்வன் திட்டம்’ என் நெஞ்சுக்கு நெருக்கமான திட்டமாக இருக்கிறது. இன்றைக்கு பணி நியமனம் பெற்றுள்ள மாணவர்களுக்கும் – நமக்கு துணை நிற்கும் தொழில் நிறுவனங்களுக்கும், மாணவர்களான உங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். மாணவர்களான நீங்கள் வளர வேண்டும்; வளர்த்தெடுக்க வேண்டும் என்றுதான் ஏராளமான திட்டங்களை நாங்கள் இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

கல்லூரி மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் லேப்டாப் வழங்க இருக்கிறோம். நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது, கல்வியை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்; உங்களுக்கு சப்போர்ட் செய்ய நான் இருக்கிறேன். திராவிட மாடல் அரசு இருக்கிறது; நாங்கள் உருவாக்கி தரக்கூடிய வாய்ப்புகள் எல்லாவற்றையும் நீங்கள் பயன்படுத்தி, நான் முதல்வன் திட்டம் மூலமாக இன்னும் பல முதல்வர்கள் உருவாக வேண்டும். உங்கள் வெற்றியை பார்த்து, உங்களை பெற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியும், பெருமையும் அடைவார்களோ, அதே அளவு மகிழ்ச்சியையும், பெருமையையும் நானும் அடைகிறேன். உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்! திறமை இருந்தால் வெற்றி நிச்சயம்! உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்! இவ்வாறு அவர் பேசினார்.

* ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 18 முதல் 35 வயதுள்ள படித்த வேலையில்லாத இளைஞர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களை கண்டறிந்து, குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கான பயிற்சி தொகையை திராவிட மாடல் அரசே ஏற்கும்.
* தொலைதூர மாவட்டங்களில் இருந்து, பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு உணவுடன் கூடிய இருப்பிட வசதியும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக வழங்கப்படும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi