சென்னை: இஸ்ரேல் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் 14 பேர் நேற்று மதியம் விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவை சேர்ந்த 20,000 பேர் இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளில் உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் உள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு, இஸ்ரேல் நாட்டில் உள்ள தமிழர்களை, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தது. ஒன்றிய அரசு இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதோடு இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, ‘ஆபரேசன் அஜய்’ என்ற பெயரில் மீட்பு பணியை தொடங்கி உள்ளது. 114 தமிழர்கள், இந்தியாவுக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, டெல்லியில் இருந்து தனி சிறப்பு விமானம், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ், விமான நிலையம் சென்றது. அங்கு இந்தியா வருவதற்கு தயாராக இருந்த 212 இந்தியர்களை சிறப்பு விமானத்தில் ஏற்றிக்கொண்டு, நேற்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது.
அவர்களை டெல்லி விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர், ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். இந்த 212 இந்தியர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களை டெல்லி விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு அதிகாரிகள், தங்களுடைய பொறுப்பில் ஏற்றுக் கொண்டனர். அவர்களில் 7 பேர், கோவை அதை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள். மற்ற 14 பேர் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள். எனவே இவர்களை இரு பிரிவுகளாக பிரித்து, சென்னைக்கு வரவேண்டிய 14 பேரையும், டெல்லியில் இருந்து நேற்று காலை 10.10 மணிக்கு, சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் டெல்லியில் இருந்து காலை 11.35 மணிக்கு கோவைக்கு புறப்பட விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், 7 தமிழர்களும், கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இஸ்ரேல் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களில் 14 பேர் நேற்று பகல் 1 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த 14 தமிழர்களையும், தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கலாநிதி வீராசாமி எம்.பி. மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றனர். மீட்கப்பட்டு சென்னை வந்தவர்களை அவர்களது குடும்பத்தினர், உறவினர்களும், கட்டி தழுவி உணர்ச்சி பொங்க வரவேற்றனர். அதன்பின்பு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வாகனங்களில், 14 பேரும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
*நிம்மதியை இழக்க செய்த தொடர் குண்டு சத்தம்: மாணவன் உருக்கம்
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஆராய்ச்சி மாணவன் கூறுகையில், ‘‘நான் இஸ்ரேல் சென்று மூன்று மாதங்கள் ஆகிறது. உயர்கல்வி ஆராய்ச்சிக்காக சென்றேன். அங்கு போர் தொடங்கிய ஒரு வாரம், மிகுந்த அச்சம் பீதியில் இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடம் அருகே குண்டு வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தது. இதனால் நிம்மதி இழந்தோம். அதன் பின்பு இந்திய அரசு, மற்றும் தமிழ்நாடு அரசு, இந்திய தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை மீட்டனர்.
மீட்பு பணி மிகச் சிறப்பாக இருந்தது. போர் ஓய்ந்ததும் மீண்டும் இஸ்ரேல் சென்று, எனது ஆராய்ச்சி படிப்பை தொடர்வேன்’’ என்றார். தேனியை சேர்ந்த கோகுல் மணவாளன் என்ற ஆராய்ச்சி மாணவன் கூறுகையில், ‘‘போர் தொடங்கியதுமே, இந்திய தூதரகம் எங்களை தொடர்பு கொள்ள தொடங்கி விட்டது. அதோடு, தமிழ்நாடு அரசில் இருந்தும் எங்களை தொடர்பு கொண்டனர். எங்களை மிகுந்த பாதுகாப்புடன் முதல் விமானத்திலேயே இந்தியாவிற்கு அழைத்து வந்து, இப்போது சொந்த மாநிலத்திற்கும் வந்து விட்டது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.
* இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் படிப்படியாக மீட்கப்படுவார்கள்: – அமைச்சர் பேட்டி
தமிழக அரசு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு சார்பில் விமான டிக்கெட் எடுத்து கொடுத்து, தற்போது டெல்லியில் இருந்து இவர்கள் சென்னை வந்துள்ளனர். மேலும் 7 பேர் டெல்லியில் இருந்து விமானத்தில், கோவை சென்றுள்ளனர். இஸ்ரேலில் இருக்கும் மீதி தமிழர்களும், படிப்படியாக விமானம் மூலம் மீட்கப்பட்டு அழைத்து வரப்படுவார்கள்.
இப்போது சென்னை வந்துள்ள 14 பேரில், இருவர் பெண்கள், 12 பேர் ஆண்கள். இவர்கள் அனைவரும் இஸ்ரேல் நாட்டில் உயர்தர ஆராய்ச்சி கல்விக்காக, பல்கலைக்கழகங்கள் மூலமாக சென்றவர்கள். இவர்களின் ஆராய்ச்சி படிப்பு தொடர்வது சம்பந்தமாக, தமிழ்நாடு முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.