மொழி, சாதி, பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவற்றிற்காக மாணவர்கள் முன்னெடுத்த மிகப் பெரும் போராட்டங்கள் பல ஆட்சிகளை மாற்றி உள்ளது. ஆங்கிலத்தோடு இந்தியையும் நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக மாற்றும் அலுவல் மொழி சட்டம் 1963-ஐ எதிர்த்து 1965ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெருந்திரளான அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பல மாணவர்கள் தீக்குளித்தும், துப்பாக்கி சூட்டிலும் உயிரிழந்தனர்.
1974ம் ஆண்டு பீகார் மாநில மாணவர்கள் அம்மாநிலத்தில் ஊழல், தேர்தல், கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி மிகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அது `ஜே.பி இயக்கம்’ என்று பரவலாக குறிப்பிடப்படுகிறது. 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திரா காந்தி அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால பிரகடனத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தனர். பீகார் மாநில மாணவர்கள் முன்னெடுத்து, வட இந்தியா முழுவதும் பரவிய போராட்டத்தின் விளைவாக 1977ல் இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சி மத்தியில் ஆட்சியை அமைத்தது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியேறியுள்ள சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான போராட்டத்தை 1979-85 இடைப்பட்ட காலத்தில் அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் முன்னெடுத்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே உள்ளிட்டோருக்கு எதிராக தலைநகர் கொழும்பில் மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து அரசுக்கு எதிராக கண்டன பேரணி ஒன்றை நடத்தினர். அடக்குமுறைக்கு எதிராகவும், பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராகவும், உரிமைகளுக்காக போராடுவோம்’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தை நடத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.
அந்த வரிசையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அந்நாட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் அவரை பதவி விலக வைத்துள்ளது. கடந்த 1971ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், போலீசை ஏவி போராட்டக்காரர்களை கொன்றதற்கு நீதி கேட்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் நேற்று குவிந்தனர்.
மேலும், பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீவைத்தனர். போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீசார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீசார் உயிரிழந்தனர். பிரச்னை பெரிய அளவில் வெடித்ததால் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். வங்கதேசத்தில் ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக அந்நாட்டு ராணுவ தளபதி வாக்கர் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். நியாயமான மாணவர்கள் போராட்டம் எப்போதும் வலிமையானது என்பதற்கு இதுவே உதாரணமாக அமைந்துள்ளது.