சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 90 கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவை. இந்த கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிறகு, அதன் தேர்ச்சி சதவீதத்தை அதிகமாக காட்டி இருக்கின்றன. இது உண்மையானதா என்பதை கண்டறியவும், மாணவர்களின் தரத்தை சரிபார்க்கவும், ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு தேர்வுக்கான வினாத்தாள்களை அமைக்கவும், அதற்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு இருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் இதை நடைமுறைப்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தன்னாட்சி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் உண்மை நிலை தெரியவரும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் இந்த முடிவால் தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும், தரவரிசையில் முதல் 100 இடத்தில் இருக்கும் கல்லூரிகள், ‘‘நாக் ஏ பிளஸ் பிளஸ்’’ கிரேடு மற்றும் 6 ஆண்டு என்.பி.ஏ. அங்கீகாரம் இருக்கும் கல்லூரிகளுக்கு இந்த விதி பொருந்தாது என்றும் சொல்லப்படுகிறது. இதுதவிர அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ள மற்றொரு முக்கிய முடிவில், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தியரி மற்றும் பிராக்டிக்கல் வகுப்புகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் அண்ட் பிளானிங் ஆகிய பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் செயல்படுத்தப்படும். இதுதவிர, பல்கலைக்கழகம் தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு படிப்புகளை அங்கீகரிப்பது, குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் பட்டங்களை வழங்குவது உள்பட பல சேவைகளை பல்கலைக்கழகம் செய்கிறது. இந்த சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த பல்கலைக்கழக சிண்டிகேட் அங்கீகரித்துள்ளது.