கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூரை சேர்ந்தவர் ரிஷ்வான் (16). திருவாரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவரது உறவினர் மகன் பாசித் (எ) முகமது இர்பான் சரிப் (16). கீழ்வேளூரில் தனியார் ஐடிஐயில் படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் நவ்புல்தீன் (18). திருவாரூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு மூவரும் ஒரே பைக்கில் கீழ்வேளூர் சென்றுவிட்டு கூத்தூர் திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை நவ்புல்தீன் ஓட்டினார். குருக்கத்தி பெட்ரோல் பங்க் அருகே நள்ளிரவில் திருச்சியில் இருந்து குளிர்பானம் ஏற்றி வந்த லோடுவேன், பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மூவரும் படுகாயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கக்ப்பட்டனர். வழியிலேயே ரிஷ்வான், பாசித் ஆகிய இருவரும் இறந்தனர். நவ்புல்தீன் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.