மாணவர்களுக்கு ஐயம் வந்தால் ஆசிரியரிடம் கேட்பார்கள்.மார்க்கச் சட்டத்தில் ஐயம் வந்தால் அறிஞர்களிடம் கேட்பார்கள்.சரி, வானவர்களுக்கு (மலக்குகள்) ஐயம் வந்தால்…?வானவர்களுக்கே ஐயம் எனில் வல்ல இறைவனைத் தவிர வேறு யாரால் தீர்த்துவைக்க முடியும்?அப்படியென்ன வானவர்களுக்கு ஐயம் வந்துவிட்டது?இதயத்தை அள்ளுகின்ற ஓர் அழகான நபிமொழியைப் பார்ப்போம்.இறைவனின் அடியார்களில் ஒருவர், “என் இறைவா, உன் திருமுகத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப, உன் ஆட்சியதிகாரத்தின் பிரம்மாண்டத்திற்கு ஏற்ப உனக்கே புகழ் அனைத்தும்” என்று கூறினால் வானவர்கள் இருவரும் வியப்புற்று அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்று தெரியாமல் தடுமாறி விடுகிறார்கள்.
அதாவது, “அல்ஹம்துலில்லாஹ்” என்று ஓர் அடியான் புகழ்ந்தால் அதற்கு இத்தனை நன்மைகள் என்று வானவர்கள் பதிவு செய்துவிடுவார்கள்.‘சுப்ஹானல்லலாஹ்’ இறைவன் தூய்மையானவன் என்று ஒருவர் புகழ்ந்தால் அதற்கேற்ற நன்மைகளை வானவர்கள் பதிவேட்டில் எழுதிக் கொள்வார்கள்.ஆனால், மேலே கூறியவாறு ஓர் அடியான் இறைவனைப் புகழ்ந்தால் அதற்கு எத்தகைய நன்மை களைப் பதிவுசெய்வது என்று தெரியாமல் வானவர்கள் தடுமாறி விடுகிறார்கள். ஐயத்தைத் தீர்த்துக் கொள்ள இறைவனிடம் செல்கிறார்கள்.அந்த வானவர்கள் வானத்தை நோக்கி ஏறி, “எங்கள் இறைவா, உன் அடியான் ஒரு சொல் கூறியுள்ளான். அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.
இறைவன் தன் அடியான் கூறியதை நன்கறிந்து கொண்டே, “என் அடியான் என்ன கூறினான்?” என்று கேட்பான்.அதற்கு அந்த வானவர்கள், “என் இறைவா, உன் திருமுகத்தின் கண்ணியத்திற்கேற்ப, உன் ஆட்சியதிகாரத்தின் பிரம்மாண்டத்திற்கேற்ப உனக்கே புகழ் அனைத்தும் என்று உன் அடியான் கூறினான்” என்றார்கள்.இறைவன் அந்த வானவர்கள் இருவரிடமும் கூறுவான்:“என் அடியான் கூறியவாறே எழுதுங்கள். அவன் என்னைச் சந்திக்கும் நாளில் நான் அதற்கான கூலியை அவனுக்கு வழங்குவேன். ”(இப்னு மாஜா)உலகப் புகழ்பெற்ற திருக்குர் ஆன் விரிவுரையாளர் ஷஹீத் சையத் குதுப் எழுதிய “திருக்குர்ஆனின் நிழலில்” எனும் நூலில் இந்த நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது. எத்துணை அழகான நபிமொழி.இறைவனைப் புகழ்ந்து துதிக்கும் அடியானுக்குக் கிடைக்கவிருக்கும் ஏராளமான நன்மைகளை இந்த நபிமொழி உணர்த்துகிறது.ஏகனைத் துதித்துப் போற்றுவோம். நன்மைகளை அள்ளிக்கொள்வோம்.
– சிராஜுல் ஹஸன்.