சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர இருந்த நிலையில் அவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் சீனிவாசபுரம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குரு. இவரது மகன் ரிஷிகேஷ் (18). விருகம்பாக்கம் லோகையா காலனியை சேர்ந்தவர் ஹரிஷ் (18) என்பவரும் நண்பர்கள். இருவரும், மாங்காடு பகுதியை சேர்ந்த ரிஸ்வான் (18), சாம் (18) ஆகியோருடன் நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப் பார்க்கச் சென்றனர்.
ஏரியில் நீர் நிறைந்திருந்ததைப் பார்த்ததும், ஆர்வ மிகுதியில் 4 பேரில் ரிஷிகேஷ் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கி குளிக்க தொடங்கினர். மற்ற இருவரும் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, மாணவர்கள் ரிஷிகேஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோர் ஏரியின் 4ம் கண் மதகு அருகே ஆழமான பகுதிக்குச் சென்று குளித்ததாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாத இருவரும் ஆழமான பகுதியில் சிக்கி தத்தளிப்பதை பார்த்த நண்பர்கள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் ரிஷிகேஷ், ஹரிஷ் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர்.
இதுகுறித்து உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாணவர்கள் இருவரையும் மீட்க சுமார் ஒரு மணி நேரம் போராடினர். ஆனால், அதற்குள் அவர்கள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து மாணவர்கள் ரிஷிகேஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோரின் சடலங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஏரியில் மூழ்கி இறந்த மாணவர்கள் இருவரும் நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒருவர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், மற்றொருவர் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சேர இருந்தது தெரியவந்தது.