திருவள்ளூர்: தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான 37வது ஜூனியர் தடகள போட்டி நாமக்கல் மாவட்டம் கேஎஸ்ஆர் கல்லூரியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் திருவள்ளூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பில் பாரதிதாசன் பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்குபெற்று பல பதக்கங்களை வென்றனர்.
20 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் என்ரிக் லூக் வில்காக்ஸ் தங்கப்பதக்கம் வென்றார். 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹெக்சாத்லான் போட்டியில் சஞ்சய் கணேஷ் வெள்ளிப் பதக்கம் மற்றும் 1000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார். அதேபோல் 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ரோகன் சங்கர் வெண்கல பதக்கம் வென்றார். 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கௌசிக் வெண்கல பதக்கம் வென்றார்.
20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் கிருத்திகா, சுருதி ஆகிய இருவரும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 1000 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் பிரியன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 1000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் ஜெய்தர்ஷன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 16 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 1000 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் எஜஸ்வினி வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் மோ.தி.உமா சங்கர், தலைமை ஆசிரியர்கள் ஜோ.மேரி, தே.குமரீஸ்வரி மற்றும் தடகள பயிற்றுநர் த.மோகன் பாபு ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.