சென்னை: அரசின் சார்பாக உருவாக்கப்பட்ட பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி மகளிர் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான சோப்பு, எண்ணெய், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.100 கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.150 வழங்கப்பட்டு வந்தது.
இந்த பராமரிப்பு பொருட்களை மாணாக்கர்கள் சரிவர வாங்குவதில்லை என்பதை அறிந்த தாட்கோ பொலிவு என்ற புதிய திட்டத்தை உருவாக்கியது. ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த சுமார் 35 ஆயிரம் பள்ளி மாணவர்கள் 15 ஆயிரம் கல்லூரி மாணவர்கள், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 10 ஆயிரம் மாணாக்கர்கள் என 60 ஆயிரம் பேர் பயனடையும் வகையில் இந்த மாத இறுதியிலிருந்து பொலிவு பராமரிப்பு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. பொலிவு திட்டம் மாணாக்கர்களுக்கு பயனளிப்பதோடு மகளிருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி இருப்பதால் மாணாக்கர்களும், மகளிரும் இத்திட்டத்தை வரவேற்று அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.