டாக்கா: மாணவர்கள் போராட்டத்துக்கு பணிந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்குள் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என மாணவர் அமைப்பினர் கெடு விதித்திருந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ராணுவத் தளபதி அறிவித்த இடைக்கால அரசை விரைந்து அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசவும் அந்நாட்டு ராணுவத் தளபதி வக்கார் உஸ்-ஜமான் முடிவு செய்துள்ளார்.
கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உருவானது. பின்னர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து வங்கதேச கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கை கடந்த ஜூலை 21-ம் தேதி விசாரித்த வங்கதேச உச்ச நீதிமன்றம், வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்களின் போராட்டம் ஓய்ந்தது. இந்த சூழலில், போராட்டத்தை முன்னின்று நடத்திய 6 பேரை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் மாணவர் சங்க மூத்த தலைவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியதால், வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் மீண்டும் வலுத்தது. பிரதமர் ஷேக் ஹசீனா உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏற்பட்ட வன்முறையில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
தலைநகர் டாக்கா உட்பட நாடுமுழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. சிராஜ்கஞ்ச் காவல் நிலையத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், 14 போலீசாரை படுகொலை செய்தனர். டாக்காவில் 2 முன்னணி நாளிதழ்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தலைநகர் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வங்கதேச தந்தை முஜிபுர் ரகுமானின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது. டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் வன்முறை கும்பல் நுழைந்தது. பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டிலும் நுழைந்து சேதப்படுத்தினர்.
இலங்கையில் நடந்தது போன்று வங்கதேசத்திலும் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் சூறையாடப்பட்டதை, சர்வதேச நாடுகள் உன்னிப்பாக பார்த்தன. கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால், பிரதமர் ஷேக் ஹசீனா தனது தங்கை ஷேக் ரெகனா உள்ளிட்ட சிலருடன் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் இந்திய மாநிலமான உத்தரபிரதேசம் சென்றார். பின்னர் அங்கிருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு சென்றார். முன்னதாக, தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்ற ராணுவத்திடம் அனுமதி கோரினார். ஆனால், அவரது கோரிக்கையை ராணுவ தலைமை நிராகரித்துவிட்டது.
இந்த பரபரப்பான சூழலில், நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், ‘பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். விரைவில் அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்படும். இப்போதைய சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி முகமது சஹாபுதீனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்படாது’ என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து பங்கபாபனில் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் தலைமையில், முப்படை தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தொடர்ந்து ஜனாதிபதி நேற்றிரவு மக்களிடம் ஆற்றிய உரையில், ‘வங்கதேச நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும். அதற்கு முன்னதாக அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இடைக்கால அரசு அமைக்கப்படும். நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைவோம். பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு நாட்டை முன்னேற்ற பாடுபடுவோம்’ என்று கூறினார்.
இந்த நிலையில், மாணவர் அமைப்பினர் இன்று பிற்பகல் 3 மணிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என கெடு விதித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது நாடளுமன்றம் கலைக்கப்பட்டது. தொடர்ந்து ராணுவத் தளபதி அறிவித்த இடைக்கால அரசை விரைந்து அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளபட்டுவருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்துப் பேசவும் அந்நாட்டு ராணுவத் தளபதி வக்கார் உஸ்-ஜமான் முடிவு செய்துள்ளார்.
முன்னதாக இடைக்கால அரசாக ராணுவ ஆட்சியை ஏற்க மாட்டோம் என மாணவர் அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைக்க மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.