கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் பேராசிரியை ஒருவர், மாணவர்களிடம் ஜாதி ரீதியாக பேசியதாக கூறி, எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கடந்த சில தினங்களாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். தற்போது அந்த பேராசிரியை நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.
இதனால் கல்லூரி நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், மாணவர்கள் அதை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அசாதாரணமான சூழல் கருதி, ஆட்சிமன்ற குழுவின் தீர்மானத்தின்படி, நேற்று (28ம்தேதி) முதல் மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக கல்லூரி முதல்வர் மாதவி அறிவித்தார். இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் கல்லூரி வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.