*கள்ளச்சாராய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி பேச்சு
பெரம்பலூர் : ஒரு போதும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் நடந்த போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி பாலமுருகன் பேசினார்.பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டஎஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) பால முருகன், இன்ஸ்பெக்டர் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) வேலுசாமி, சப். இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட இசைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் தீங்குகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார்.
அப்போது பள்ளி மாணவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) பால முருகன் பேசியதாவது :பள்ளி மாணவியர்கள் ஒருபோதும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது.சிலமாணவர்களிடம் போது மான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தவறான வழியில் செல்கின்றனர். அவர்கள் அத்தகைய பழக்கத்தில் இருந்து உடனடியாக வெளிவந்து உடல் நலத்தை பேணிக்காத்து நன் முறையில் வாழ வேண்டும்.
இதுஅவர்களது பெற்றோர்கள் மட்டுமல்லாது அனைவரின் விருப்பமாக உள்ளது. மேலும் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மூளை செயல் இழந்து, மனதளவிலும் உடலளவிலும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கப் படும் நிலைக்கு தள்ளப் படுவார்கள். எனவே போதைப் பழக்கத்தை முற்றிலும் ஒழித்து போதைப் பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்.
மேலும் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை அருந்தி உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தங்களது பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம், கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனைசெய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்று விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.