புதுடெல்லி: டெல்லியில் பயிற்சி மையத்தில் மூன்று மாணவர்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. டெல்லியின் ராஜேந்திர நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த மழைநீரில் சிக்கி இரு மாணவிகள், ஒரு மாணவர் உட்பட 3 பேர் பலியாகினர். இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
அப்போது இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக கடந்த ஆண்டு நீதிமன்றத்தால் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும், டெல்லி நகராட்சி முழுமையாக நடவடிக்கைகள் எடுக்க வில்லை. இதுவே மூன்று பேர் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. டெல்லியின் முழு நிர்வாகக் கட்டமைப்பும் மறுஆய்வு செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் டெல்லி போலீசாரின் விசாரணை என்பது நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்று டெல்லி அரசு மற்றும் போலீசாருக்கு சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள், மூன்று மாணவர்கள் இறந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை அமைப்புக்கு மாற்றி கடந்த 2ம் தேதி உத்தரவிட்டனர். அதையடுத்து சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையையும் சிபிஐ தொடங்கி விட்டது. இதுதொடர்பாக சிபிஐ தரப்பில் விரிவான அறிக்கை கொண்ட பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.