சென்னை: கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செம்மஞ்சேரியில் நேற்று காலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைச்சிற்பி பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் கலை மற்றும் கல்வித் திறன்களை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டி:
கிராமப்புற மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக ரூ. 70 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஓவியம் உள்ளிட்ட கலைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆறு நாட்கள் தங்கியிருந்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சி மாணவர்களுக்கு புதிய கண்ணோட்டத்தை அளிக்கிறது.
‘திருச்சி மாவட்டத்தில் ஆதி திராவிடர் பள்ளியைச் சேர்ந்த ராகினி என்ற மாணவி, கிளாட் (CLAT) – தேர்வில் தேர்ச்சி பெற்று நாக்பூரில் உள்ள சட்டக் கல்லூரியில் இடம் பெற்றார். அவரை வரவேற்க வந்தபோது, முதலமைச்சர் வாகனத்திலிருந்து இறங்கி வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல், சமூக நீதி திட்டங்களுக்கு பயன்படுத்திய பேனாவை பரிசாக வழங்கினார். இது எங்கள் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கிறது. இதுபோன்ற முயற்சிகள் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. கலை சிற்பி திட்டமும் இதற்கு அடுத்தபடியாக அமைந்துள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு கல்லூரி கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு அரசு களப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. 11ம் வகுப்பு மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று, ஆய்வகங்கள், வகுப்பறைகள், பேராசிரியர்கள், மற்றும் விளையாட்டு வசதிகள் குறித்து அறிமுகப்படுத்துகிறோம். முதல் ஆண்டு 33,000 மாணவர்கள் பங்கேற்ற இத்திட்டம், தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கி உள்ளது. இதன் மூலம், ‘நானும் கல்லூரியில் சேர வேண்டும்’ என்ற மனப்பான்மை மாணவர்களிடம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டம் வெறும் சுற்றுலாவாக இல்லாமல், மாணவர்களின் கல்வி லட்சியங்களை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அடுத்தக்கட்ட கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளுக்கு அப்பால், அவர்களின் எதிர்காலப் பயணத்துக்கு வழிகாட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது. இது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்கள் குறித்து கற்பிக்கின்றனர். இனிமேல் பள்ளி மாணவ-மாணவிகளையும் கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அழைத்துச் செல்லுவோம். இத்திட்டம் மாணவர்களுக்கு வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி நிதியை பெற நாளை ஆலோசனை கூட்டம்
அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.586 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டியுள்ளது. அதற்காக துறைசார்ந்த ஆலோசனை கூட்டம் ஜூன் 23ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. அதன்பின்னர் முதல்வரிடம் ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் நிதியை பெற வழக்கு தொடுக்க உள்ளோம் என சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.